×

வட்டிக்கு கடன் கொடுத்ததை தொழிலாக கருத முடியுமா?: உயர்நீதிமன்றத்தில் ஐ.டி தாக்கல் செய்த மனுவில் நடிகர் ரஜினி தெரிவித்த கணக்கு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்திற்கு கடந்த 2002-03ம் நிதி ஆண்டுக்கு ரூ.6  லட்சத்து 20 ஆயிரத்து 235ம், 2003-04ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326ம், 2004-05ம்  ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875ம் அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி  ரஜினிகாந்த் சென்னையில் உள்ள வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த 2013ம் ஆண்டு ரஜினிக்கு எதிராக வருமான  வரித்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014ம் ஆண்டு மேல்முறையீடு செய்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ஒவ்வொரு ஆண்டிலும் 50 லட்சத்திற்கு குறைவாக அபராத தொகை விதிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடர தேவையில்லை என்ற நிலை இதற்கு  முன்பு இருந்தது.

இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்தாண்டு ஆகஸ்டில் பிறப்பித்த ஒரு சுற்றறிக்கையில், ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு கோடி மற்றும் அதற்கு குறைவாக அபராதத் தொகை விதிக்கப்பட்டு இருந்தால் அதை எதிர்த்து புதிதாக  வழக்கு தொடர வேண்டியதில்லை. ஏற்கனவே இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து இருந்தால் அதை வாபஸ் பெற வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் இந்த வழக்கை திரும்பப்பெற  அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் நீதிபதிகளிடம் கோரினார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, வருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்  வட்டி பெற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், நிகர வருமானமான ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு வரி செலுத்திவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ஒரு  கோடியே 95 லட்சம் ரூபாய் வழங்கியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் வழங்கியதாகவும், 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய்  வழங்கியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

004-05ம் ஆண்டில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் கடன் திரும்ப வரவில்லை என்றும், இதன் காரணமாக, 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். கடன் கொடுத்ததை தொழிலாக கருத முடியுமா?  என்று கேட்டபோது, தான் இதனை தொழிலாக செய்யவில்லை என்றும், தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுத்துள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று வழக்கை கைவிடுவதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.  ரஜினி வட்டிக்கு பணக் கொடுத்துள்ள தகவல் வெளியாகிய நிலையில் #கந்துவட்டிரஜினி என்ற ஹஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.


Tags : business ,High Court ,Rajinikanth , Can interest be considered a lending business ?:Rajinikanth in a petition filed by IT in High Court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...