×

சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை வென்று இந்தியா சாதனை: வில்லியம்சன் அதிரடி வீண்

ஹாமில்டன்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில், பரபரப்பான சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் பிளேர் டிக்னருக்கு பதிலாக ஸ்காட் குகலெஜின் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ரோகித், ராகுல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 23 பந்தில் அரை சதம் விளாசினார். பென்னட் வீசிய 6வது ஓவரில் அவர் 3 சிக்சர், 2 பவுண்டரி அடித்தது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக விளையாடிய ரோகித் - ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 89 ரன் சேர்த்தது. ராகுல் 27 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ரோகித் 65 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

ஷிவம் துபே 7 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 17 ரன், கேப்டன் விராத் கோஹ்லி 38 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர்.  இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. மணிஷ் பாண்டே 14 ரன், ஜடேஜா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் பென்னட் 3, சான்ட்னர், கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கப்தில், மன்றோ இருவரும் துரத்தலை தொடங்கினர். கப்தில் 31 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), மன்றோ 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பிக்கையுடன் அடித்து விளையாட, சான்ட்னர் 9 ரன், கிராண்ட்ஹோம் 5 ரன்னில் வெளியேறினர்.

வில்லியம்சன் 30 பந்தில் அரை சதம் அடித்தார். வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க, நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கியது. பூம்ரா வீசிய 17வது ஓவரில் 14 ரன், 19வது ஓவரில் 11 ரன் விட்டுக்கொடுத்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட்ட நிலையில், ஷமி வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கினார் டெய்லர். இதனால் 5 பந்தில் 3 ரன் தேவைப்பட இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர். அடுத்த பந்தில் 1 ரன் கிடைத்தது. மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்ட முனைந்த விலியம்சன் ராகுல் வசம் பிடிபட்டார். அவர் 95 ரன் (48 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக அவுட்டானார். 4வது பந்தில் செய்பெர்ட் ரன் எடுக்கத் தவறினார். 2 பந்தில் 2 ரன்...ஷமி வீசிய 5வது பந்தில் 1 ரன் உதிரியாகக் கிடைக்க (‘பை’), ஸ்கோர் சமநிலையை எட்டியது.

கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் டெய்லர் அடித்த பந்து மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஸ்டம்புகளை பதம் பார்த்தது. ஆட்டம் சரிசமனில் முடிய (டை), இந்திய வீரர்கள் ஆர்ப்பரித்தனர். இதைத் தொடர்ந்து, வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவர்: பூம்ரா வீசிய ஓவரில் நியூசிலாந்தின் கப்தில் - வில்லியம்சன் ஜோடி 17 ரன் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, சவுத்தீ வீசிய ஓவரை ரோகித் - ராகுல் ஜோடி எதிர்கொண்டது. முதல் 2 பந்தில் ரோகித் 2, 1 ரன் எடுத்தார். 4 பந்தில் 15 ரன் தேவைப்பட்ட நிலையில்... ராகுல் 4, 1 ரன் எடுத்து ரோகித்துக்கு வாய்ப்பை கொடுத்தார். கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்டதால் நியூசிலாந்து உற்சாகமானது.

ஆனால், 5வது பந்தை ரோகித் சிக்சருக்கு தூக்க... கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க வேண்டிய கட்டாயம். ரசிகர்கள் நிலைகொள்ளாமல் தவிக்க, ‘ஹிட்மேன்’ ரோகித் அசால்ட்டாக அதையும் சிக்சராக விளாசி த்ரில் வெற்றியை வசப்படுத்தினார்.
இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றதுடன், நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரையும் கைப்பற்றி அபார சாதனை படைத்தது. ரோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4வது போட்டி வெலிங்டனில் நாளை பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது.


Tags : India ,time ,New Zealand ,Williamson Action New Zealand Soil: Williamson , Williamson, New Zealand, India
× RELATED கடலூர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 827 பேர் மீது வழக்குப்பதிவு