
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பள்ளி யில் பொருட்களை லவட்டிக் கொண்டு சென்ற திருடனுக்கு ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதம் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்குள் புகுந்த திருடன் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த ₹40 ஆயிரம் மற்றும் ₹50 ஆயிரம் மதிப்பிலான கேமராவையும் திருடி சென்ற சம்பவம் நடந்தது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மீண்டும் திருட்டு நடந்தது. உள்ளே புகுந்த திருடன் 2 லேப்டாப்புகள், கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ள கார்டு டிஸ்க் மற்றும் சில பென்டிரைவ்களையும் திருடி சென்றான். இதற்கிடையே பள்ளி ஆசிரியர்கள் சிலர் பொருட்களை திருடி சென்ற திருடனுக்கு எழுதிய கடிதம் வைரலாக பரவி வருகிறது.
அதில், அன்புள்ள திருடனுக்கு, நீ மீண்டும் எங்கள் பள்ளிக்கு வந்து திருடியது மோசமான நடவடிக்கையாகி விட்டது. எங்களது அனுமானம் சரியாக இருந்தால், 7 மாதங்களுக்கு முன்பு நீ தான் இங்கு வந்து திருடி இருக்க வேண்டும். அப்போது ரூ.40 ஆயிரம் மற்றும் மாணவர்களுக்காக வாங்கி வைத்திருந்த கேமராவையும் திருடி சென்றுவிட்டாய். போலீசில் புகார் செய்தும் அவர்களால் உன்னை கைது செய்ய முடியவில்லை. இந்த முறையும் நீ புகுந்து சில முக்கிய பொருட்களை திருடி சென்றுவிட்டாய். கண்காணிப்பு கேமராவில் உன்னுடைய காட்சிகள் பதிவாகி இருக்கும் என்பதால் அதன் ஹார்டு டிஸ்க்கை கொண்டு சென்றுவிட்டாய். நீ திருடி சென்ற பொருட்ளில் உனக்கு பயன்படாத எங்கள் டிஜிட்டல் சிக்னேச்சர்கள் அடங்கிய பென்டிரைவ்களையும் எடுத்து சென்றுவிட்டாய். அந்த சிக்னேச்சர் இருந்தால் தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும்.
நீ அதை திருடி சென்றுவிட்டதால் இந்த மாதம் எங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு மருந்து கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பலர் வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். இதனால் அவர்கள் இருமடங்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். உன்னால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் சிரமத்தை நினைத்து அந்த பென்டிரைவை மட்டும் திரும்பி தந்துவிடு. உனது வேலை திருடுவதாக இருந்தால், நீ பள்ளியில் திருடுவதை விட்டுவிட்டு ஒரு நல்ல வேலை செய்ய கற்றுக்கொள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.