×

ஆபரேஷனுக்கு முன்பே நோயாளி மர்மச்சாவு: தனியார் மருத்துவமனையை உறவினர்கள் திடீர் முற்றுகை

* நிர்வாகம் மீது போலீசில் புகார்
* தண்டையார்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில், ஆபரேஷனுக்கு முன்பு நோயாளி மர்மமான முறையில் இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு திடீர் போராட்டதில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அளவுக்கதிகமாக மயக்க மருந்து கொடுத்ததில் நோயாளி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.  தண்டையார்பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சேகர் (54). பவர்ஹவுஸ் பகுதியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி நீலாவதி (48). தம்பதிக்கு ஹேமராஜ் (19), யுவராஜ் (18) என்ற 2 மகன்கள் உள்ளனர்.கடந்த சில மாதங்களாக சேகர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 26ம் தேதி தண்டையார்பேட்டை, ரத்தினசபாபதி தெருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேகர் மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து லேசர் சிகிச்சையில் சிறுநீரக கல்லை அகற்றிவிடலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் மாலை லேசர் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர், இரவு 9 மணியளவில் சேகரை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சேகர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து சேகரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சேகருக்கு அதிக மயக்க மருந்து கொடுத்ததால் இறந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் சேகரின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். மேலும், இதுதொடர்பாக தண்டையார்பேட்டை போலீசில், சேகரின் உறவினர் தேவராஜ் புகார் மனு அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவரது மர்மச்சாவு குறித்த தகவல்கள் தெரியும் என்பதால் அதன் பிறகே தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்படும் என, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Patient Marmachau ,hospital ,relatives , Operation, Patient Marmachau, Private Hospital, Siege
× RELATED கொரோனா அறிகுறி- முதியவரை வீட்டை விட்டு...