×

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவிலிருந்து வரும் மற்றும் சீனா செல்லும் அனைத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து

லண்டன்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவிலிருந்து வரும் மற்றும் சீனா செல்லும் அனைத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட மொத்தம் 15 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அனைத்து நாடுகளும் தங்களது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் மருத்துவ சோதனை மையங்களை நிறுவியுள்ளன.

இந்நிலையில், சீனாவிற்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டனின் மிக முக்கிய விமானச் சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறையின் ஆலோசனையை தொடர்ந்து அத்தியாவசிய பயணங்களைத் தவிர, சீனா செல்லும் மற்றும் அங்கிருந்து பிரிட்டன் வரும் எங்கள் நிறுவனத்தின் அனைத்து விமானங்களையும் உடனடியாக ரத்து செய்துள்ளோம் என கூறியுள்ளது. சிரமத்திற்கு வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், ஆனால் வாடிக்கையாளர்கள் மற்றும் விமானக்குழுவினரின் பாதுகாப்புதான் எப்போதும் எங்களது முன்னுரிமை என பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக, ரஷியாவின் யூரல்ஸ் ஏர்லைன்ஸ், சீன சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான பாரிஸ் மற்றும் ரோம் உள்ளிட்ட சில ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : flights ,China ,British Airways ,virus attack ,Corona ,attack , British Airways,flights,from China, canceled,Corona virus,attack
× RELATED சர்வதேச விமான சேவை 31 வரை ரத்து