×

தூங்கி வழியும் பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆற்காடு நகரை சுற்றி பாலாற்றில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரை சுற்றி பாலாற்றில் கொட்டப்பட்டு எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவது குறித்து பொதுப்பணித்துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு வித்திட்ட நகரமான ஆற்காடு நகரை வடக்கில் இருந்து வடகிழக்காக மாலை போல பாலாறு சுற்றி செல்கிறது. ஒரு காலத்தில் பாலாற்றின் நீர்வளத்தால் வேளாண்மை பூமியாக விளங்கிய ஆற்காடு நகரை சுற்றியுள்ள கிராமங்கள் இன்று வானம் பார்த்த பூமியாகி போயுள்ளது. இந்த நிலையில் இருக்கும் நிலத்தடி நீராதாரத்தையும் மணல் மாபியாக்களும், தொழிற்சாலை கழிவுகளும் சேர்ந்து பாழாக்கி வருகிறது.

இது ஒருபுறம் என்றால் பாலாற்றின் இருகரையின் நெடுகிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் கொட்டப்படும் குப்பைகளும், கழிவுநீரும் பாலாற்றின் முகத்தையே மாற்றியுள்ளது. இதில் அதிகபட்சமாக பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு நகரங்களில் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் பாலாற்றில் கொட்டி எரிக்கப்படுவது அந்நகரங்களை ஒட்டி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை மட்டுமின்றி, பொதுமக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதோடு பாலாற்றின் கரையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உடல்நலத்துக்கும் கேடுவிளைவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.

அதோடு ரசாயன கழிவுகளும் கலப்பதால் மேற்கண்ட நகரங்களை ஒட்டி பாலாற்றின் நிலத்தடி நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீரில் குரோமியத்தின் அளவு அதிகரித்துள்ளதுடன், நீரின் சுவையும் உவர்ப்பு தன்மையுடன் மாறியுள்ளது. ஆனால் இவ்விஷயத்தில் ஏனோ உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமின்றி அக்கறை காட்ட வேண்டிய பொதுப்பணித்துறையின் நீராதாரப்பிரிவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தூங்கி வழிவதுதான் புரியவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் ஆற்காடு நகர மக்கள் மட்டுமின்றி அதன் கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும்.
எனவே, இனிமேலாவது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் பாலாற்றையும், அதன் நிலத்தடி நீராதாரத்தையும், அதன் சூழலையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பொதுப்பணித்துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அக்கறை காட்ட வேண்டும் என்று ஆற்காடு நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sleepwalking Public Works Department ,Pollution Control Board Sleeping Public Works Department ,Area , Public Works Department, Pollution Control Board, Arcot, Rubbish, Motorists
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி