×

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி 106 ஆனது இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம்: வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. 4,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே, சீனாவில் தவித்து வரும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார் நிலையில் உள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில்  சுகாதாரமற்ற இறைச்சி மூலமாக மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க, ஹூபெய் மாகாணத்தில் பல்வேறு நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. பஸ், ரயில் என பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, 5 கோடி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

பல்வேறு மருத்துவ வசதிகளை மேற்கொண்ட போதிலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியவில்லை என சீன அரசு கைவிரித்து விட்டது. இந்நோயின் பாதிப்பால் மக்கள் பலியாவது வாடிக்கையாகி விட்டது. நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 82 பேர் பலியாகி இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 24 பேர் இறந்து, பலி எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.  மேலும், 1,291 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுவரை வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக அதிகரித்துள்ளது. 2,567 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 563 பேரின் நிலைமை மோசமாகவும், 127 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவும் இருப்பதாக ஹூபெய் மாகாண சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இம்மாகாணம் முழுவதும் 32,000 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீடியாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் முக்கிய நகரங்களான பீஜிங், ஷாங்காயில் தலா ஒருவர் முதல் முறையாக கொரோனா வைரசுக்கு பலியாகி இருப்பது பீதியை மேலும் அதிகரித்துள்ளது.  இதற்கிடையே, சீன புத்தாண்டு விடுமுறையை அடுத்த மாதம் 2ம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது. வரும் 30ம் தேதியுடன் விடுமுறை முடிவடைதால், லட்சக்கணக்கான வெளிநாடு ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் மட்டும் புத்தாண்டு விடுமுறை பிப்ரவரி 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பீஜிங் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட 55 போக்குவரத்து நிலையங்களில் வெப்பநிலை பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

சீனா மட்டுமின்றி தாய்லாந்து (7), ஜப்பான் (3), தென் கொரியா (3), அமெரிக்கா (3), வியட்நாம் (2), சிங்கப்பூர் (4), மலேசியா (3), நேபாளம் (1), பிரான்ஸ் (3), ஆஸ்திரேலியா (4), இலங்கை (1) ஆகிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து வருபவர்களை பல்வேறு நாடுகள் முழு உடல் பரிசோதனை செய்த பிறகே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கின்றன. இதற்கிடையே, சீனாவில் 700 இந்திய மாணவர்கள் தங்கி மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். அவர்கள் பலர் விடுமுறைக்காக நாடு திரும்பினாலும், வுகான் நகரில் 250 முதல் 300 மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அங்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. அவர்களை அழைத்து வர மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மும்பையில் இருந்து 423 இருக்கைகள் கொண்ட ஏர் இந்தியா ஜம்போ விமானம் தயார் நிலையில் உள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு தகவல் பெறப்பட்டு வருகிறது. ஹூபெய் மாகாணத்தில் சிக்கி இருக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன,’’ என்றார்.

இந்திய மாணவர்கள் கண்ணீர் வீடியோ:
ஹூபெய் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 32 இந்திய  மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களில் கேரள  மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவை சேர்ந்த மாணவர் அக்‌ஷய்  பிரகாஷ், பாலக்காடு ஒற்றப்பாலத்தை சேர்ந்த மாணவி ஹரிதா ஆகியோரும் உள்ளனர்.  இவர்கள் தங்கள் பெற்றோருக்கு நேற்று அனுப்பிய வீடியோவில், ‘‘பல்கலைக் கழகத்திலுள்ள விடுதியில் நாங்கள் பல  வாரங்களாக சிக்கித் தவித்து வருகிறோம். எங்களுக்கு வெளியே செல்ல அனுமதி  கிடையாது. உணவு, தண்ணீர் காலியாகி வருகிறது. குழாய் தண்ணீரை தான்  சூடுபடுத்தி குடிக்கிறோம். சாலைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ரயில்  மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கடைகள், ஓட்டல்கள் உட்பட  அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் மட்டும் தான்  திறக்கப்பட்டுள்ளன. அங்கு உணவு வாங்கி சாப்பிட பயமாக இருக்கிறது.  நாளுக்கு  நாள் இங்கு நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, எங்களை  விரைந்து காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ்
கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 155 விமானத்தில் 33,552 பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 14 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதிலும், யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளனர். தற்போது, சீனாவில் இருந்து வைரஸ் பாதிப்புடன் திரும்பியவர்களில் 6 பேர் மும்பை, புனே மருத்துவமனையிலும், 3 பேர் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையிலும், மபி மாநிலம் உஜ்ஜைனியில் வுகானில் இருந்து திரும்பிய தாய், மகனும், பஞ்சாப்பில் ஒருவரும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

சீனாவுக்கு உடனடி விசா இலங்கை நிறுத்திவைப்பு:
சீனாவைச் சேர்ந்தவர்கள் இலங்கை வந்த பிறகு விசா பெற்றுக் கொள்ளும் சலுகையை அந்நாட்டு வழங்கி வந்தது. இதனால், சீன மக்களின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இலங்கையும் இருந்து வருகிறது. மேலும், சீன உதவியுடன் நடக்கும் துறைமுக நகரம், நெடுஞ்சாலை போன்ற உள்கட்டமைப்பு பணிகளில் ஏராளமான சீன ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சீனாவிலிருந்து கொழும்பு வந்த 40 வயது பெண் ஒருவருக்கு  கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சீனாவுக்கு வழங்கப்பட்ட உடனடி விசா சலுகை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், சீனாவில் படித்து வரும் 204 மாணவர்கள் கடந்த 3 நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு தந்த தவறான அறிக்கை:
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து சர்வதேச பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக ஐநா.வுக்கு அளித்த அறிக்கையில், கொரோனா வைரசால் உலகுக்கு ‘மிதமான’ அச்சுறுத்தலே இருப்பதாக கூறி இருந்தது. இந்நிலையில், தற்போது புதிய அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில், ‘மிதமானது’ என தவறாக குறிப்பிட்டதாகவும், சீனாவில் தற்போது நிலைமை மிகவும்  அபாய கட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

14 நாட்கள் தனியாக வைத்து பரிசோதனை:
பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய மாணவர்களை அனுப்பி வைக்க தூதரகம் தரப்பில் சீன அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. சீனாவிலிருந்து இந்தியா திரும்பும் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார். இதேபோல், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஹூபெய் மாகாணத்தில் தவித்து வருகின்றனர். அவர்களையும் சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் சம்மந்தப்பட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.



Tags : flight ,China ,Indian ,Foreign Ministry , China, Coronavirus, killed 106, Indian students, Ministry of Foreign Affairs
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...