×

மார்த்தாண்டத்தில் உரிமையாளர் வீட்டில் சாவியை திருடி துணிகரம் நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை

மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் உரிமையாளர் வீட்டுக்குள் புகுந்து, பூஜை அறையில் இருந்த சாவியை திருடி  வந்து நகை கடையை திறந்து சுமார் 2 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ஆசைதம்பி. இவர் மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பொன் விஜய் (40). அங்குள்ள பஸ் நிலையம் எதிரில்  நகை கடை நடத்தி வருகிறார். இவர்கள் கூட்டு குடும்பமாக வசிக்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு நகை கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற, பொன் விஜய் கடை சாவியை பூஜை அறையில் வைத்து விட்டு உறங்க சென்றார். சாவியுடன் 56 பவுன் தங்க நகைகளும், 1 லட்சம் ரொக்கமும் இருந்துள்ளது. நேற்று காலை மாடி கதவு திறந்த நிலையில் இருந்தது. அங்கு சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு, பூஜை அறையில் இருந்த 56 பவுன் நகைகள், 1 லட்சம் கொள்ளை போனதோடு, நகை கடை சாவியும் மாயமாகி இருந்தது. உடனடியாக நகை கடைக்கு சென்று பார்த்துள்ளனர். கடை ஷட்டர் பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே இருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருந்தன. கண்ணாடி அலமாரிகள் சுத்தமாக துடைத்து வைத்தது போல் இருந்தது.

புகாரின்படி மார்த்தாண்டம் போலீசார், எஸ்.பி. ஸ்ரீநாத் வந்து விசாரித்தனர். பொன் விஜய் வீட்டு மாடி வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர், பூஜை அறையில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்ததோடு, நகை கடை சாவியை எடுத்து சென்று கடையை திறந்து சாவகாசமாக நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். கடையில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில், அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இரு கண்கள் மட்டும் வெளியே தெரியும்படி பனிக்குல்லா அணிந்து நுைழந்து நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து சாவகாசமாக பையில் வைத்துக்கொண்டு தப்பி செல்கிறார்.  அந்த நபர் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த மாதம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் ஒரு நகை கடையில் 80 பவுன் கொள்ளை போனது. அதில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் மார்த்தாண்டத்தில் மேலும் ஒரு நகை கடை மற்றும் கடை உரிமையாளர் வீட்டில் இருந்து 2 கிலோ, 48 கிராம் நகைகள் கொள்ளை போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளாவுக்கு தப்பி ஓட்டம்: கொள்ளை நடந்த வீடு மற்றும் நகை கடையில் போலீஸ் மோப்ப நாய் ஓரா வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. நகை கடையை சுற்றி உள்ள மற்ற கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் மார்த்தாண்டம் பஸ் நிலைய சந்திப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பைக்கில் வரும் மர்ம நபர், பஸ் நிலையத்தில் இருந்து நந்தன்காடு செல்லும் சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு ஹெல்மெட் அணிந்தபடி நகை கடைக்கு வருவதும், பின்னர் பூட்டை திறந்து உள்ளே செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது. இதைதொடர்ந்து கொள்ளையடித்த நகைகளுடன் குழித்துறை ரயில்வே ரோட்டில் பைக்கில் செல்லும் காட்சிகள் உள்ளன. எனவே கொள்ளையன் கேரளாவுக்கு தப்பி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : jeweler ,shop , 2kg of gold looted ,jeweler's shop
× RELATED தங்கம் விலை மேலும் மேலும் அதிகரிப்பு: 42 ஆயிரத்தை நெருங்கியது சவரன்