×

குடியுரிமை காக்க ஒரு கோடி கையொப்பம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: குடியுரிமை காக்க ஒரு கோடி கையொப்பம் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ. அரசு தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அதிகார ஆணவத்தினால் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும் வகையில் மொழி-பண்பாடு-இனம்-மதம் எனப் பல தளங்களிலும் தன்னுடைய மதவெறி அடிப்படைச் சித்தாந்தத்தைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக - மத அடிப்படையில் - நாட்டைப் பிளவுபடுத்தும் மனப்பான்மையுடன் ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019’, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ஜனநாயகத்திற்குப் புறம்பான வகையில், மக்கள் மீது திணித்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, மாணவர்களையும் மக்களையும் போராட்டக் களத்தில் தள்ளி, நாடு சந்தித்து வரும் பொருளாதாரச் சீரழிவுகளிலிருந்து தேசத்தின் கவனத்தைத் திசை திருப்பி, தனது அடிப்படைவாதச் சித்தாந்தத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் மத்திய பா.ஜ. அரசு செயல்பட்டு வருகிறது.இந்த சட்டம் தேவையில்லை என்பதை திமுக மட்டுமல்ல, தோழமைக் கட்சியினர் மட்டுமல்ல, பா.ஜ.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளே கூறுகின்றன.

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் குடிமக்கள், தங்களின் பிறந்த தேதிக்கான சான்றுகளைக் காட்ட வேண்டும் என்கிறார்கள். தங்களின் பிறந்தநாள் சான்று மட்டுமின்றி, தங்கள் பெற்றோர் குறித்த சான்றுகளும் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பிறந்தநாள், பிறந்த இடம் உள்ளிட்ட விவரங்களில் குழப்பம் ஏற்பட்டால், அவர்கள் கொண்டாடும் பண்டிகையினைக் கேட்டு அறிவதற்கான கையேடும் தரப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் கொண்டாடுகிற பண்டிகைகளின் பெயர்கள் இல்லை என்பதிலிருந்தே இந்த திட்டத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் பா.ஜ. அரசின் தேச விரோதச் செயல்களைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் ஜனவரி 24 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக, தோழமைக் கட்சியினர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், இந்த சட்டத்துக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 2 முதல் 8 வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தொடங்கிய குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் இந்தியாவின் பல பகுதிகளிலும் எழுச்சியுடன் பரவியுள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் திமுக சார்பில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் பேரணி ஏற்படுத்திய அதிர்வு இங்குள்ள ஆட்சியாளர்களை மட்டுமல்ல, இந்தியாவை ஆள்பவர்களையும் அதிர வைத்தது.

இந்துகளும் இஸ்லாமியர்களும் அவர்களுடன் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரும் ஒன்றாக இணைந்து போராட்டக் களத்தில் நிற்பதை ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடுத்தடுத்த பேச்சுகளே சான்றுகளாக இருக்கின்றன.
மேலும் தமிழ்நாட்டையே உலுக்குகின்ற பொதுத் தேர்வாணையத்தின் குரூப்-4 மோசடிகள் அம்பலமாகி, கைது நடவடிக்கைகள் ஆரம்பமாயின. முக்கிய குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காக இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால், உயர்மட்டம் வரை ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடைபெறவே வாய்ப்பில்லை. மேலிடத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற சில பலி ஆடுகள் கைது செய்யப்பட்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது. மிச்சமிருக்கும் சொற்ப காலத்தில் முடிந்தவரை சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் எடப்பாடி தலைமையிலான அடிமை அ.தி.மு.க அரசில் எந்தவித நியாயமும் நீதியும் கிடைக்காது.மக்களின் எழுச்சியும் அவர்களின் ஒத்துழைப்பும்தான் நீதியை நோக்கிய பயணத்திற்குத் துணை நிற்கும். திமுக, தோழமைக் கட்சியினரும் நடத்துகின்ற கையெழுத்து இயக்கம் என்பது நீதிக்கான நெடும்பயணம். திமுக நிர்வாகிகள் அதை உணர்ந்து, மாவட்டந்தோறும் கையெழுத்து இயக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் போல விளக்க வேண்டும். அதன்மூலம் ஒவ்வொருவரும் மனதார கையெழுத்திட வேண்டும்.
தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்தினைப் பெறுவதற்காக பிப்ரவரி 2 முதல் 8 வரை இந்தப் பயணம் வீடு வீடாகத் தொடர வேண்டும். ஒரு கோடி மக்கள் கையெழுத்து இயக்கம், பல கோடிகளாக பெருகட்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,volunteers , One crore signature, defend citizenship,MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...