×

முகப்பு பகுதிக்கு மூடுவிழா நடத்திய மாநகராட்சி: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தடுப்பு கம்பிகளால் இடையூறு... வாகன ஓட்டிகள், பயணிகள் குமுறல்

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் முகப்பு பகுதியில் காணப்படும் தடுப்பு கம்பிகளால் பஸ் ஸ்டாண்ட் களையிழந்து வருகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றவும், இறக்கி விடவும் வரும் பயணிகள் டூவீலர்களை நிறுத்த உரிய இடமின்றி திண்டாடுகின்றனர். நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். நெல்லை சந்திப்பு பழைய பஸ் நிலையம் இடிக்கப்பட்டுவிட்ட சூழலில், நெல்லை மாநகரின் மொத்த போக்குவரத்தையும் தற்போதைக்கு புதிய பஸ் நிலையமே சுமந்து வருகிறது. 4 பிளாட்பார்ம்களை கொண்ட பஸ் நிலையத்தில் சமீபகாலமாக பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பிரச்னையாய் இருப்பது பஸ் நிலையம் முன்புள்ள தடுப்பு கம்பிகளாகும்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன எனக்கருதி நெல்லை மாநகராட்சி சார்பில் முகப்பு பகுதியில் அங்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. அக்கம்பிகள் காரணமாக முன்பக்க பகுதியில் எந்தவொரு வாகனமும் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக பஸ் நிலையத்தின் முகப்பு தோற்றமாக கடந்த சில மாதங்களாக களையிழந்து காணப்படுகிறது. இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் தேவேந்திரன், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில், ‘‘பஸ் நிலையம் என்பது பயணிகள் வரவு மட்டுமின்றி, வாகன போக்குவரத்தையும் ஒட்டியே அமையும். தமிழகத்தில் எந்தவொரு பஸ் நிலையத்திலும் வாகன முகப்புகள் இப்படி அடைப்பட்டு கிடப்பதில்லை. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மட்டுமே அவற்றை கம்பி வைத்து மறைத்துள்ளனர்.

அப்பகுதியில் முன்பு போல ஆட்டோக்களை நிறுத்தவும், பயணிகளை இறக்கிவிட வரும் டூவீலர்கள் வந்து செல்லவும் வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில் குறைந்தபட்சம் முன்பு போல சர்க்குலர் பஸ்களையாவது அங்கு இயக்கலாம்’’ என்றனர். புதிய பஸ் நிலையத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் காரணமாக டூவீலர்கள் அனைத்தும் 1வது பிளாட்பார்ம் மற்றும் 4வது பிளாட்பார்ம் பக்கவாட்டில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் பஸ்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. சில பயணிகள் மேற்கு பகுதியில் வேய்ந்தான்குளத்தை ஒட்டி கூட வாகனங்களை நிறுத்திவிட்டு பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றனர். தடுப்பு கம்பிகளால் அடிக்கடி விபத்தும் நடப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மேலப்பாளையம் கொட்டிக்குளத்தை சேர்ந்த பயணி வெள்ளத்துரை கூறுகையில், ‘‘புதிய பஸ் நிலையம் முகப்பு பகுதியில் தடுப்பு கம்பிகள் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை.

முட்டளவுக்கு ஆங்காங்கே காணப்படும் கம்பிகளில் சிலர் டூவீலர்களில் வந்து மோதிவிடுகின்றனர். ஒருவாரத்திற்கு முன்பு அக்கம்பியில் ஒரு பைக் மோதி எனது காலில் ஏறிவிட்டது. இதனால் நான் மருத்துவமனை சென்று கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்தேன். ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு பெண்மணி இக்கம்பியில் மோதி விழுந்த சம்பவமும் உண்டு’’ என்றார்.மேலும் முகப்பு வெறுமையாய் கிடப்பதால், இரவு நேரங்களில் அங்கு ஆள் நடமாட்டமே இருப்பதில்லை. இதை பயன்படுத்தி கொண்டு சிலர் அங்குள்ள பூங்காவில் மது அருந்துதல் உள்ள சமூக விரோத செயல்களையும் மேற்கொள்கின்றனர். எனவே நெல்லை மாநகராட்சி அங்குள்ள தடுப்பு கம்பிகளை அகற்றி முன்பு போல பொதுமக்கள் நடமாடவும், வாகனங்கள் வந்து செல்லவும் முகப்பு பகுதியை திறந்துவிட வேண்டும்.

வியாபாரம் கடும் பாதிப்பு
முகப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளால் வியாபாரம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பஸ் நிலைய வியாபாரி மகராஜன் கூறுகையில், ‘‘எல்லா பஸ் நிலையங்களிலும் முகப்பு பகுதியில் காணப்படும் கடைகளில்தான் வியாபாரம் களைக்கட்டும். ஆனால் இங்கு தடுப்பு கம்பிகள் காரணமாக இரவு நேரங்களில் யாருமே எங்கள் கடைகளை சீண்டுவதில்லை. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மொத்தம் 126 கடைகளும், 3 ஓட்டல்களும் உள்ளன. முகப்பு பகுதியில் லாபம் கொட்டும் என்ற நம்பிக்கையிலே நாங்கள் கடைகள் எடுத்தோம். ஆனால் தடுப்பு கம்பிகள் வைத்த நாளில் இருந்தே வியாபாரம் சரிபாதியாக சரிந்துவிட்டது. எனவே கம்பிகளை அகற்றிட மாநகராட்சி முன்வரவேண்டும்’’ என்றார்.

Tags : New Bus Stand ,Convention of Closing Ceremony ,Paddy , Paddy New Bus Station, Block Wire, Disturbance
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...