×

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்: நிர்மலா தேவிக்கு 2வது முறையாக பிடிவாரண்ட்

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவிக்கு 2வது முறையாக பிரிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்ல முயற்சி செய்த பேராசிரியை நிர்மலா தேவி, உதவி  பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் சாட்சி விசாரணைக்காக அவர்கள் மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடந்த 18ம் தேதி முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நிர்மலா தேவி தொடர்ந்து காரணம் கூறி ஆஜராகாமல் வருவதால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து  உடனே கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இருப்பினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதனை தொடர்ந்து, இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றும் அவர் ஆஜராகாததால் நிர்மலா தேவிக்கு 2வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூவரும் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார். ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : college students ,Nirmala Devi , College Student, Wrong Path, Nirmala Devi, 2nd Time, Bdivarand
× RELATED தனியார் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்