×

அருப்புக்கோட்டை நகராட்சியில் சும்மா கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. தாமிரபரணி, வைகை குடிநீர் திட்டம் மூலம் நகரில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடிப்பதற்கு தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்களின் மூலம் நகர் முழுவதும் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். குடிப்பதற்கு பொதுமக்கள் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையே அதிகம் வாங்குகின்றனர். இதனால் நகர் முழுவதும் 10க்கு மேற்பட்ட தனியார் டிராக்டர்கள் மூலம் குடிநீரை போட்டி போட்டு தெரு தெருவாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மக்கள் குடிநீருக்காக தினந்தோறும் அதிகம் விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். இதனால் அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் வாழவந்தம்மன் கோவில் தெரு, எஸ்பிகே பள்ளி ரோடு, நகராட்சி சுகாதார பிரிவு அலுவலகம், காந்தி மைதானம், பாரதி நகர், டெலிபோன் ரோடு, கொண்டலம்மள் கோவில் தெரு, தேவாடெக்ஸ் காலனி, அன்புநகர், ராமசாமிபுரம் காலனி, தும்பைக்குளம் கண்மாய், நேருநகர், கொண்டலம்மன் கோவில் தெரு, மகாளியம்மன் கோவில் தெரு, நேதாஜி ரோடு, பழைய பேருந்து நிலையம், பட்டாபிராமர் கோவில் தெரு, இளைஞர் சங்கம் தெரு உட்பட 20 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.  தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நகராட்சி மூலம் 600 அடியில் போர்வெல் அமைத்து தரப்படும். இந்த இடத்தில் மினரல் வாட்டர் பிளாண்ட் அமைத்து சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தும் வரை தனியார் ஒப்பந்ததாரரின் பணியாகும்.  20லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் 7 ரூபாயும், 1 லிட்டர் 1 ரூபாய்க்கும் விற்பனை செய்ய நகராட்சி நிர்ணயம் செய்துள்ளது.   அந்தந்த இடங்களில் அமைக்கப்படும் மினரல் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.  

இதற்கான முதற்கட்ட பணிகளாக வாழவந்தம்மன் கோவில் தெரு, எஸ்பிகே பள்ளி ரோடு, நகராட்சி பூங்கா, காந்திமைதானம், பாரதிநகர் ஆகிய 4 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் மையம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது, இந்த இடங்களில் போர்வெல் இன்னும் போடவில்லை. பிளான்ட் அமைப்பதற்குரிய  மிஷின்களும் பொருத்தப்படவில்லை.  நகராட்சியில் இதுகுறித்து கேட்டால் போர்வெல் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுகின்றனர்.  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களை நகராட்சி அதிகாரிகள் அழைத்து பேசி போர்வெல் போட ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் அனைத்து பகுதி மக்களுக்கும்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள 4 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் செயல்படவும், மேலும்  நகரில் 16 முக்கிய இடங்களில் அமைக்கப்படும் சுத்தகரிப்பு நிலையங்களின் பணிகள் விரைவில் துவக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த மையங்கள்  பயன்பாட்டிற்கு வந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  எனவே நகராட்சி நிர்வாகம் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Silent Drinking Water Treatment Plants , SIMPLIFIED, DRINKING ,WATER
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...