×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்ததாக 2019 பிப்ரவரி 24ம் தேதியன்று இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல பெண்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் இளம்பெண் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி போலீசார், பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இவர்களது நீதிமன்றக்காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், 5 பேரும் சேலம் சிறையில் இருந்து கோவை மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ.எஸ்.ரவி, 5 பேரின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 11ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தும் நீதிபதி உத்தரவு பிற்ப்பித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு உள்ளதால், வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, பிப்ரவரி 11ம் தேதி முதல் புதிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் மீது கடந்த மே மாதம் 24ம் தேதி குற்றப்பத்திரிக்கை தலைமை குற்றவியல் நடுபர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த குற்றப்பத்திரிக்கையின் நகல் குற்றவாளிகள் தரப்பிற்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.


Tags : Coimbatore Chief Criminal Court ,Different Courts ,Coimbatore , Pollachi, Sexual Harassment, Case, Coimbatore, District Court
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்