×

நடப்பாண்டில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொது தேர்வு: ரத்து குறித்து அடுத்த ஆண்டு பரிசீலனை...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: நடப்பாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவிலிருந்து அரசு பின் வாங்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழ்நாடு மாநில  பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது. ஏற்கனவே 10ம் வகுப்பு தேர்வை பழைய பாடத்திட்டத்தில் பெயிலான மாணவர்கள் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நடக்கும் 10ம் வகுப்பு  தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் என்று கடந்த 3ம் தேதி அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. இதன்பேரில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில், பத்திரிக்கை ஒன்றின் 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து  அரசு  பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். 1 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை சரளமாக ஆங்கிலம் பேச, ஆயிரம் ஆங்கில வார்த்தைகள்  என்ற பாடத்திட்டத்தின் கீழ் வாரம் 45 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

விடுமுறை நாட்களில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு தமிழ் பயிற்சி, மற்றும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தவும் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செங்கோட்டையன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அவர்,  5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் பற்றி, அடுத்த ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும் என்று கூறினார். நடப்பாண்டு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும்  எனவும் உறுதிபட தெரிவித்தார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் எச்.வி ஹன்டே மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Tags : Compulsory public exams for 5th and 8th grade students in the current year.
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...