×

மசோதாக்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை ஆந்திரா சட்டமேலவையை கலைத்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: தெலுங்குதேசம் எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

திருமலை: ஆந்திராவில் மசோதாக்களை நிறைவேற்ற முட்டுக்கட்டையாக இருந்ததால் சட்ட மேலவையை கலைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கூட்டத்தை தெலுங்குதேசம் எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். ஆந்திராவில் கடந்த சில நாட்களாக அரசு கொண்டு வந்த மூன்று தலைநகர் அமைப்பதற்கான மசோதா மற்றும் (சிஆர்டிஏ) தலைநகர் அமராவதி வளர்ச்சி ஆணையம் ரத்து செய்வதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டாலும் சட்ட மேலவையில் எதிர்க்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளதால் அரசு கொண்டு வரக்கூடிய அனைத்து சட்ட மசோதாக்களையும் நிறைவேற்ற விடாமல் தடுத்து (செலக்ட் கமிட்டிக்கு) தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மேலவைத் தலைவர் ஷரீப் அனுப்பி வைத்தார்.

இதுபோன்று தாழ்த்தப்பட்டோருக்கான தனி சட்ட மசோதா, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சட்ட மசோதா என மாநில அரசு கொண்டு வரக்கூடிய அனைத்து சட்ட மசோதாக்களையும் மேலவையில் எதிர்க்கட்சிகள் தடுத்து வந்ததால் மேலவையை கலைக்க மாநில அரசு முடிவு செய்தது. சட்டமேலவை கலைக்கப்பட்டால் மாநில அமைச்சர்களாக உள்ள பில்லி சுபாஷ் சந்திரபோஸ், மோப்பிதேவி வெங்கட்ரமணா ஆகியோர் பதவியை இழக்க நேரிடும். ஆனால் ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்த பதவியை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், அமைச்சரவை சிறப்பு கூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டமேலவையை கலைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலவை கலைப்பதற்கான மசோதாவை  சட்டப்பேரவையில் நிதியமைச்சர் போக்கன்ன ராஜேந்திரநாத் கொண்டு வந்தார். தொடர்ந்து நடந்த விவாதத்திற்கு பின்னர் மேலவை கலைப்பதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.

Tags : Assembly ,legislature ,Bill ,Andhra Pradesh Legislative Council ,MLAs Andhra Pradesh , Bill, deadlock, Andhra Pradesh legislation, dissolution, convention, resolution, passage, Telugu Desam MLAs, boycott
× RELATED பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண...