×

நிர்பயா வழக்கில் திருப்பம் 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிற்கு எதிராக குற்றவாளி முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது. நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் வரும் 1ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து இருந்தார்.  இதையடுத்து, ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக முகேஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது.  முகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில் எங்களது மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிற்கு எதிராக குற்றவாளி முகேஷ் குமார் சிங் தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் மற்றும் போபன்னா ஆகியோர் கொண்ட அமர்வு இன்று பிற்பகல் 12.30மணிக்கு விசாரணை நடத்த உள்ளதாக நீதிமன்றம் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னதாக நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமாரின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனுவை டெல்லி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.



Tags : session ,judges , Nirbhaya case, 3 judges session
× RELATED செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை...