×

தனிப்பட்ட ஒருவருக்காக விலக்கு கிடையாது நீட் தேர்வு ரத்தாகாது: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை கண்டிப்பாக மாற்றவோ அல்லது  தனிப்பட்ட ஒருவருக்காக மட்டும் எந்தவித விலக்கோ அளிப்பது தொடர்பான  பேச்சுக்கே இடமில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று திட்டவட்டமாக  தெரிவித்துவிட்டது. தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட்  தேர்வை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வேலூரை சேர்ந்த  தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில  தினங்களுக்கு முன்னதாக மனுதாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு, உச்ச  நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர்  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீட்  தொடர்பான வழக்கு தான் ஏற்கனவே நீதிமன்றத்தின் வாயிலாக முடித்து  வைக்கப்பட்டு விட்டதே என தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு  வழக்கறிஞர், “இது நீட் தேர்வு சட்ட திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கு. புதியதாகும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நீட் தேர்வு வழக்கு விவகாரத்தில்  நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பு என்பது தெளிவாக விசாரணை நடத்திய  பின்னர்தான் வழங்கப்பட்டுள்ளது. அதனால் நீட் தேர்வு தொடர்ந்து கண்டிப்பாக  நடைபெறும். அதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. குறிப்பாக ஒரு தனியார்  கல்லூரிக்கு மட்டும் அதிலிருந்து விலக்கு அளிக்க முடியுமா என்றால், அது  கேள்விக்குறிதான். மேலும் அதுபோன்று மாற்றியமைப்பது என்பது நீதிமன்றத்தின்  வேலை கிடையாது. குறிப்பாக நீட் தேர்வை எய்ம்ஸ் மருத்துவமனையே  கடைபிடிக்கும்போது ஏன் நீங்கள் மட்டும் எதிர்த்து வழக்கு தொடர்ந்து  உள்ளீர்கள் என சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள் மருத்துவ படிப்புகளுக்கு  நீட் தேர்வு கட்டாயம் என்பது ஏற்கனவே முடிவு செய்துவிட்ட ஒன்று  என்று திட்டவட்டமாக தெரிவித்து அதுகுறித்து தாக்கல்  செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக வைத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தமிழகத்துக்கு பின்னடைவு
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக  தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி புதிய ரிட் மனு  ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்விற்கு கண்டிப்பாக தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக நேற்று  உத்தரவிட்டுள்ளாதால் அதே கோரிக்கை கொண்ட தமிழக அரசின் மனுவின் நிலைமை என்ன  என்பது கேள்வியாக உள்ளது. இதில் நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்கும்  நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில்தான் விசாரணைக்கு வரும் என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags : No , Neet exam, Supreme Court
× RELATED 10-ம் வகுப்பு தேர்வில் காய்ச்சல் உள்ள...