×

தனி நபர் உரிமையில் தலையீடு என்பிஆர் தேவை தானா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு : மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடு அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுக்களுக்கு, மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) பணியை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மேற்கொள்வதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. இதை ரத்து செய்யக்கோரி பீகாரைச் சேர்ந்த 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்குதல் மற்றும் புதுப்பிப்பு பணி முழுவதும் தனி நபர் ரகசியத்தில் குறுக்கிடுவதாக உள்ளது. கடந்த 1948ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கணக்கெடுப்பு சட்டத்தில், மக்களிடம் சேகரிக்கப்படும் தகவல்களை சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. யாருக்கும் தெரிவிக்கப்படாது. ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியில் பெறப்படும் தகவல்களுக்கு அதுபோன்ற பாதுகாப்புகளுக்கு உத்தரவாதம் இல்லை.

கணக்கெடுப்பு சட்டத்தில், கணக்கெடுப்பு அதிகாரி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிக்கு அதுபோன்ற கட்டாயம் இல்லை. இது தொடர்பாக கையேட்டில் களப்பணியாளர்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல் விதிமுறைகள் 2003ன் கீழ் சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த விதிமுறை தனிநபர் ரகசியத்தில் தலையிடுவதாக உள்ளது. இதுபோன்ற தனிப்பட்ட தகவல்களை பெற அரசுக்கு எந்த முக்கிய காரணமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Tags : NPR ,government ,Supreme Court ,Central , NPR, intervene in individual rights,Supreme Court case,Central government to answer
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்...