×

மின்வயர் அறுந்து விழுந்து குடிசைகள் சாம்பல்

திருவொற்றியூர்: மாதவரத்தில்  மின் வயர் அறுந்து விழுந்ததில், 4 குடிசைகள் எரிந்து சாம்பலானது. தீயில் சிக்கிக் கொண்ட குழந்தையை காப்பாற்றிய தாய்க்கு காயம் ஏற்பட்டது. மாதவரம் அலெக்ஸ் நகர் சி-காலனி பகுதியை சேர்ந்தவர் தயாநிதி (37) கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது குடிசையின் மேலே சென்ற மின் வயர் திடீரென்று தீப்பொறியுடன் எரிந்து இவரது குடிசையில் மீது விழுந்தது. இதனால் குடிசை தீப்பற்றி எரிந்தது. காற்று பலமாக வீசியதால் பக்கத்தில் வீட்டிலுள்ள குடிசைகளுக்கும் தீ பரவியது. உள்ளே உறங்கிக் கொண்டு அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த மாதவரம் தீயணைப்பு துறையினர் இரண்டு வண்டிகளில் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் குணசேகரன், தயாநிதி, ஜெயக்குமார், மணி ஆகியோரது வீடு  முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. உள்ளே இருந்த கட்டில், பீரோ, டிவி, ரேஷன் கார்டு, புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

இதனிடையே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது உள்ளே அருகில் குடியிருக்கும் வரலட்சுமி  என்பவரது மகள் சுபஸ்ரீ (3) குடிசைக்குள் சிக்கிக்கொண்டாள். இதைப் பார்த்த தாய் வரலட்சுமி எரிந்துகொண்டிருந்த குடிசைக்குள் சென்று குழந்தையை  காப்பாற்றி வெளியே கொண்டுவந்தார். இதில் வரலட்சுமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தீப்பற்றி எரிந்த பகுதிகளை முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவி வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னாள் கவுன்சிலர் தட்சிணா மூர்த்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, துணி போன்ற உதவிப் பொருட்களை வழங்கினார்.

Tags : Electro cardiogram , huts are gray
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...