×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணி நிரந்தரம் செய்ய கோரி பணியாளர்கள் போராட்டம்

தாம்பரம்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தினக்கூலி பணியாளர்கள்  200க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்கம், அரசு பணியாளர்கள் சங்கம் என மூன்று சங்கங்களும் ஒன்றிணைந்து பூங்காவில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களில் முதுநிலை வரிசைப்படி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவேண்டும் என நிர்வாகத்திற்கு பெயர் பட்டியலுடன் கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பூங்கா நிர்வாகம் காலதாமதம் செய்துவிட்டு தற்போது தன்னிச்சையாக 54 பேருக்கு மட்டும் பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பட்டியலில் முதுநிலை இல்லாத பணியாளர்களின் பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே எந்தெந்த பணியாளர்களின் பெயர் பட்டியலில் உள்ளது என தெரிவிக்க வேண்டுமென 3 சங்கங்கள் சார்பில் பூங்கா நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் நிர்வாகம் சார்பில் எந்த பதிலும் அளிக்காததால் பூங்கா நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை பூங்கா வளாகத்தின் உள்ளே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அலுவக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க தலைவர் ஜெயசீலன், செயலாளர் டேவிட், அரசு பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் இரணியப்பன் உட்பட தினக்கூலி  பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் சங்கங்கள் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Staff fighters ,Vandalur Zoo Vandalur Zoo , Staff fighters, demanding permanent work ,Vandalur Zoo
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...