×

100 சதவீத பங்குகளும் கைமாறுகின்றன ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை : ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

புதுடெல்லி: ஏர் இந்தியாவின் நூறு சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று நிதி திரட்டுவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. பாரத் பெட்ரோலியம் உட்பட முக்கிய நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்று வருகிறது. ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் இந்த நிறுவனத்தை விற்றுவிடும் முடிவுக்கு மத்திய அரசு வந்தது. ஏர் இந்தியாவில் மத்திய அரசுக்கு தன்வசம் உள்ள பங்குகளில் 76 சதவீதத்தை தனியாருக்கு விற்க கடந்த 2018ல் அறிவிப்பு வெளியிட்டது. அதோடு நிர்வாக குழுவில் அரசும் இடம்பெறும் என கூறப்பட்டது. அதோடு, கடன் சுமையை ஏற்பதை பற்றி உறுதி அளிக்கவில்லை. இதனால் ஏர் இந்தியாவை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இந்த முறை நூறு சதவீத பங்குகளையும் விற்று விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் நூறு சதவீத பங்குகள் மற்றும் அதனுடன் சேர்த்து ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 50 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும் எனவும், ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வரும் மார்ச் மாதம் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

தற்போது இந்த நிறுவனத்தின் கடன் சுமை சுமார் 62,000 கோடி உள்ளது. இதில் முதல் கட்டமாக 29,400 கோடி கடன் சுமையையும், பின்னர் மேலும் 9,300 கோடி கடன் சுமையையும் மத்திய அரசே ஏற்க உள்ளது. எனவே, ஏர் இந்தியாவை வாங்கம் நிறுவனம் 23,286 கோடி கடனை அடைத்தால் போதும். இதுமட்டுமின்றி, ஏர் இந்தியா நிறுவனம் வருமான வரி துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை, சுங்க வரி, சேவை வரி, அபராதம் உட்பட அனைத்தையும் அரசே ஏற்கும் என கவர்ச்சிகர சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாங்கும் நிறுவனம் ஏர் இந்தியா பெயரை மாற்றக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

* ஏர் இந்தியாவில் 76 சதவீத பங்குகளை விற்க கடந்த 2018ல் மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு வரவேற்பு இல்லை.
* தற்போது நூறு சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் 62,000 கோடி கடன் சுமையில், 23,286 கோடியை தவிர பிற கடன் சுமை மற்றும் வரி பாக்கிகளை அரசே ஏற்கும்.
* ஏலத்தில் பங்கேற்ற மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags : auction ,Air India ,Central Government , 100% stake , Air India
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...