×

எஸ்எஸ்ஐ வில்சன் படுகொலையில் கைதான தீவிரவாதிகளை உடுப்பி, பெங்களூரு அழைத்து செல்ல போலீசார் திட்டம்: என்ஐஏ அதிகாரிகள் 2ம் நாளாக விசாரணை

நாகர்கோவில்: எஸ்எஸ்ஐ வில்சன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் தவுபிக், அப்துல் சமீம் ஆகியோரை உடுப்பி, பெங்களூரு, மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் அழைத்து சென்று விசாரிக்க குமரி மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர். களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(57) கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் கோட்டார் இளங்கடையை சேர்ந்த தவுபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 10 நாள் காவலில் எடுத்து டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் எர்ணாகுளத்தில் கழிவுநீர் ஓடையில் வீசிய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டது.

தவுபிக் கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய செய்யது அலி நவாஸ் என்பவருடன் தவுபிக் உள்ளிட்ட 7 பேர் காயல்பட்டினம் வந்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் தவுபிக்கை காயல்பட்டினம் கொண்டு சென்று அங்குள்ள சீதக்காதி தெருவில் செய்யதலி நவாசின் மனைவி மைதீன் பாத்திமாவின் வீட்டில் 30 நிமிடம் விசாரணை நடத்தினர். செய்யது அலி நவாஸ் உள்ளிட்டோரை போலீசார் ஏற்கனவே தேடிவரும் நிலையில் அவர்கள் போலீசாருக்கு தெரியாமல் இங்கு தலைமறைவாக சென்று வந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் இவர்களின் சதி திட்டங்கள் தொடர்பாக போலீசாருக்கு புதிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கொச்சியில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அனிஷ் ஆகியோர் குமரி மாவட்டம் வந்து நேசமணி நகர் காவல்நிலையத்தில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரிடம் 2ம் நாளாக நேற்று காலை விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் தொடர்பாகவும், வேறு சதி திட்டங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் அவர்கள் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை தொடர்பாக தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட உடுப்பி ரயில் நிலையம் மற்றும் சதி திட்டம் தீட்டிய பெங்களூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் இருவரையும் நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இவர்களின் காவல் 31ம் தேதியுடன் முடியும் நிலையில் அதை நீட்டிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை குமரி மாவட்டத்தில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இவர்களின் வீடுகளில் ஏற்கனவே எஸ்ஐயு பிரிவு போலீசார் கடந்த டிசம்பர் 23ம் தேதி சோதனை நடத்தி லேப்டாப், செல்போன்கள், வங்கி பாஸ்புக் போன்றவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.

இதற்கிடையே நெய்யாற்றின்கரை அருகே மருத்தூர் பகுதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு சென்று பின்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். விசாரணையில் அவருக்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக கியூ பிரிவு போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். கொலை நடந்த பின்னர் தவுபிக், அப்துல் சமீம் ஆகியோர் நெய்யாற்றின்கரையில் அதிக நேரம் செலவிட இந்த வீட்டை மையப்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அங்கு இருந்து பண உதவிகள் இவர்களுக்கு கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Tags : militants ,SSI Wilson ,Bangalore ,NIA ,police escort militants , SSI Wilson, assassination, terrorist, Udupi, Bangalore, police, NIA officials, Investigation
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி