×

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் அதிக அகதிகள் உள்ள நாடாக இந்தியா மாறும்: ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

லண்டன்: ‘இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உலகிலேயே அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும்’ என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 5 அமைப்புகள், 6 தீர்மானங்களை கொண்டு வந்துள்ளன. அந்த தீர்மானத்தில் கூறப்பட்ட விவரங்கள் வருமாறு:

இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச மனித உரிமை குறித்த விதிகளுக்கும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே 2005ல் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை குறித்த ஒப்பந்தத்துக்கும் எதிராக உள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், உலக அளவில் அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும்.  இது மிகப்பெரிய மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தும். சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை அழைத்து பேசாமல், அவர்களை சில தலைவர்கள் மிரட்டுகின்றனர். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் தேசியவாதம் என்ற இலக்கை நோக்கி செல்கிறது.

ஜம்மு-காஷ்மீரில் 370வது அரசியல் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பிரசல்ஸ் நகரில் புதன்கிழமை கூடும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் மீதான விவாதம் நடைபெற்று, வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அது இந்திய அரசு, இந்திய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, ‘ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் முற்றிலும் உள்நாட்டு விவகாரம். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளவர்கள், அதை நிறைவேற்றுவதற்கு முன்பு முழு விவரங்களை எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது.

Tags : India ,refugee country , Citizenship Amendment Act, Refugees, India EU Resolution
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...