×

சி.முட்லூர் கிராமத்தில் கன்னி சிலைகளை சுமந்து சென்ற இளைஞர்கள்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது சி.முட்லூர் கிராமம். இக்கிராமத்தில் பண்டைய காலம் தொட்டு கன்னித் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் மழை பெய்யவும், நல்ல விளைச்சல் கண்டு மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். கிராமத்தில் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணமாகி அவர்கள் குழந்தை செல்வங்களுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பற்காக கிராமத்தில் கன்னித் திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் காணும் பொங்கல் பண்டிகை தினத்தில் கல் நட்டு அதை கன்னியாக நினைத்து அதற்கு தினமும் பூஜை செய்வர்.

அதுபோல் ஊரில் உள்ள ஒவ்வொரு தெரு முனையிலும் அலங்கரிக்கப்பட்ட கன்னி சிலையை வைத்து அதற்கு தினமும் வழிபாடு நடத்துவர். இவ்வாறு இந்த கிராமத்தில் உள்ள 11 தெருக்களிலும் 11 கன்னி சிலைகள் அமைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று இளைஞர்கள் கன்னி சிலைகளை சுமந்து சென்று ஆற்றில் கரைத்து வழிபட்டனர். இதில் கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கன்னி சிலைகளுக்கு பின்னால் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும், கும்மியடித்தும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

அதுபோல் கிராமத்து இளைஞர்கள் சிலம்பாட்டம், கோலாட்டம், சுருள் கத்தி போன்ற பல்வேறு வீர, தீர விளையாட்டுகளை விளையாடி தங்களது வீரத்தை பறை சாற்றினர். பின்னர் கன்னி சிலைகளை இளைஞர்கள் எடுத்துச் சென்று அருகில் உள்ள வெள்ளாற்றில் கரைத்தனர். அப்போதும் அங்கு ஏராளமான பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

Tags : men ,idols ,village ,C. Mudlur , C. Mudlur, Virgin statue, youth
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்