×

வீட்டுக்குள் தோட்டம்

நன்றி குங்குமம் முத்தாரம்

சமீபத்தில் லாஸ் வேகாஸில் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ பிரமாண்டமாக நடந்தது. அதில் பலரின் கவனத்தை ஈர்த்து ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது ஹோம் கார்டனிங் சிஸ்டம்தான்.இடப்பற்றாக்குறை நிலவும் ஒரு காலத்தில் இதுபோன்ற புதுமை வாடிக்கையாளர்களையும் வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங் மெஷின், ஸ்மார்ட் டி.வி, ஃபிரிட்ஜ் என வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் எல்.ஜி நிறுவனம் தான் இந்த ஹோம் கார்டனிங் சிஸ்டத்தைத் தயாரித்திருக்கிறது.

மொட்டை மாடி அல்லது வீட்டைச் சுற்றிக் காலி இடம் இருந்தால் அதில் இதனை வைத்துக்கொள்ளலாம். இல்லாதவர்கள் பால்கனி அல்லது வீட்டுக்குள்ளேயே கூட இந்த ஹோம் கார்டனிங் சிஸ்டத்தை வைத்துக்கொள்ளலாம்.இதை வைப்பதற்கு குறைந்த இடமே தேவைப்படும். பார்ப்பதற்கு ஃபிரிட்ஜை நினைவுறுத்துகிற இந்த இயந்திரத்துக்குள் அலமாரியைப் போல பல அடுக்குகள் இருக்கின்றன. அந்த அடுக்குகளில் துணியை அடுக்கி வைப்பதைப் போல செடிகளை அடுக்கி வளர்க்கலாம்.

ஒரு செடி வளர்வதற்கு அவசியத் தேவை சூரிய ஒளி. இந்த இயந்திரம் எல்.இ.டி மூலம் சூரிய ஒளிக்கு இணையான ஒளியைப் பெற்றுத்தருகிறது. தவிர, செடி களுக்கு உகந்த தட்பவெப்பத்தைக் கொடுக்கும் வசதி, வேர்களுக்குத் தேவையான நீரை சரியான நேரத்தில் தரும் தொழில்நுட்பம், தேங்காய் நார் படுகை, செடிகள் அழுகிப் போகாமல் பாதுகாக்கும் வசதி, ஈரத்தால் பூஞ்சை உண்டாகாமல் தடுக்கும் திறன், உர வசதி என ஒரு பரந்த தோட்டத்தில் நன்றாக விவசாயம் செய்ய என்னென்ன தேவையோ அனைத்தும் இதனுள் உள்ளது. சுமார் இருபது வகையான கீரைகள் மற்றும் தாவரங்களை இதில் வளர்க்க முடியும். விரைவில் இந்த ஹோம் கார்டனிங் விற்பனைக்கு வரவிருக்கிறது.

க.கதிரவன்

Tags : Home gardening
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...