×

போதுமான நிதி இல்லாத காரணத்தால்தான் மதிப்பு வாய்ந்த நாட்டின் சொத்துகளை மத்திய அரசு விற்பனை செய்கிறது: கபில் சிபல் தாக்கு

புதுடெல்லி: போதுமான நிதி இல்லாத காரணத்தால்தான் மதிப்பு வாய்ந்த நாட்டின் சொத்துகளை மத்திய அரசு விற்பனை செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார். பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியா ரூ.80,000 கோடி கடனில் தவித்து வருகிறது. நஷ்டத்தை ஈடு செய்வதற்காக ஏர்இந்தியாவின் 100 சதவீதம் பங்குகள் மற்றும் ஏர் இந்தியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை உள்ளடக்கிய ஏசாட்ஸ்-ன் 50% பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள மத்திய அரசு, விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும், விருப்பமுள்ள நிறுவனங்கள் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் கேட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் இம்முடிவை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் போதுமான பணம் கையிருப்பில் இல்லை. அதனால்தான் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் கீழே சென்றுவிட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது. இதனால்தான் வேறுவழியே இல்லாமல் மதிப்பு வாய்ந்த நாட்டின் சொத்துகளை விற்பனை செய்கிற வழியை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது என்று கூறியுள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ., எம்.பி.யான சுப்ரமணிய சுவாமியும் மத்திய அரசை தாக்கி பேசியுள்ளார். சுப்ரமணிய சாமி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஏர்இந்தியாவில் முதலீடுகளை திரும்பப் பெறும் திட்டம் இன்று மீண்டும் துவங்கி உள்ளது. இந்த முடிவு தேச விரோதமானது. அரசின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வேன். நமது குடும்பச் சொத்தை நாம் விற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.


Tags : government ,attack ,Kapil Sibal ,country , Air India, Central Government, Kapil Sibal, Congress
× RELATED தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; சிறப்பு...