×

கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ. கொலை கர்நாடகா, கேரள போலீசார் தீவிரவாதிகளிடம் விசாரணை: தாக்குதல் திட்டம் தொடர்பாக துருவித்துருவி கேட்டனர்

நாகர்கோவில்: குமரி எஸ்.எஸ்.ஐ. கொலையில் கைதாகி உள்ள தீவிரவாதிகளிடம்  கர்நாடகா, கேரள மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சென்றுள்ளனர். குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் (57) சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், கைதாகி உள்ள தீவிரவாதிகள் அப்துல் சமீம்,  தவுபிக் ஆகியோரிடம், போலீஸ் காவலில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை  கேரளாவில் பறிமுதல் செய்தனர்.
 கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி மற்றும் சம்பவத்தன்று இவர்கள் அணிந்திருந்த ஆடைகள், கைப்பை வரை கிடைத்துள்ளதால், இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கணேசன் தெரிவித்தார். இந்த கொலையின் பின்னணியில் யார், யார் உள்ளார்கள். துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. இவர்கள் பயன்படுத்திய பேக்கை கைப்பற்றியதில், பல ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதில் கிடைத்த துண்டு சீட்டுகளின் அடிப்படையில் டெல்லியில் கைதான காஜா மொய்தீன் தலைமையில் ஐ.எஸ்.ஐ. இயக்கத்தை (இஸ்லாமிக் ஸ்டேட் இந்தியா) உருவாக்கி செயல்பட திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகம் மாநிலங்களில் மிகப்பெரிய தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டு இருந்ததை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, கர்நாடகம் மற்றும் கேரளாவில் இருந்து உளவுப்பிரிவு போலீசார் நேற்று நாகர்கோவில் வந்தனர். நேசமணிநகர் காவல் நிலையத்தில் அப்துல் சமீம், தவுபிக் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது தங்கள் மாநிலங்களில் நடத்தப்பட இருந்ததாக கூறப்படும் தாக்குதல் திட்டம், தாக்குதல் திட்டம் தொடர்பான வரைபடம் எதுவும் தயாரிக்கப்பட்டு இருந்ததா?  என்பது பற்றி துருவித்துருவி விசாரித்தனர். ஆனால் இருவரும் முழுமையாக கூறவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வருகை: இதனிடையே தீவிரவாதிகள் 2 பேரில் தவுபிக்கை மட்டும் விசாரணைக்காக நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் அழைத்து சென்றனர். கொலை நடப்பதற்கு சில நாட்கள் முன், தவுபிக் காயல்பட்டணத்தில் இருந்துள்ளார். எனவே அவர் அங்கு யாரை சந்தித்தார். இவருக்கு உதவி செய்தது யார்? என்பது தொடர்பான விசாரணைக்காக நேற்று தவுபிக்கை மட்டும் காயல்பட்டணத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பான விசாரணைக்காக, என்ஐஏ அதிகாரிகள் நேற்று மதியம் நாகர்கோவில் வந்தனர். எஸ்.பி. நாத்தை சந்தித்து விபரங்களை கேட்டனர். இதுவரை நடந்த விசாரணையில் அப்துல் சமீம், தவுபிக் கூறிய தகவல்களை எஸ்.பி.நாத், என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் விளக்கினார்.

கூடுதலாக 10 நாட்கள் கேட்க முடிவு?
கடந்த 21ம் தேதி தவுபிக், அப்துல் சமீம் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்தனர். 31ம் தேதி மாலை இவர்களை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். 1 வாரம் விசாரணை முடிவடைந்து விட்டது. இன்னும் 3 நாள் மட்டுமே உள்ளது. ஆயுத பரிமாற்றம், துப்பாக்கி பயிற்சி, கூட்டாளிகள் தொடர்பான விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்ல வேண்டி இருப்பதால் கூடுதலாக 10 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு செய்ய, காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.


Tags : Kerala ,Kanyakumari SSI Karnataka ,extremists ,Kanyakumari , Kanyakumari, S.S.I. Karnataka, Kerala police, extremists, investigating
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...