குடும்பத்திற்கு நல்லது நடக்கும் என கூறி 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை: போலி சாமியார் கைது

சென்னை: திருநின்றவூரில் கடந்த 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த திருநின்றவூர், அண்ணா நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் அருள் (40). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில ஆண்டுகளாக, கொல்லிமலைக்கு சாமியாராக மாறி சென்று, பின்னர் 4 அல்லது 5 மாதங்கள் கழித்து வீட்டுக்கு திரும்புவார்  என கூறப்படுகிறது. இவரது 16 வயது மகள், திருநின்றவூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாள். இதற்கிடையில், அருள் தனது மகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். இதனை யாரிடமும் கூறக்கூடாது என்றும் மகளை மிரட்டி வந்துள்ளார். இதேபோல், கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருள்  தனது மகளுக்கு பாலியல் தொல்லை செய்துவிட்டு கொல்லிமலைக்கு சென்றுவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கொல்லிமலையில் இருந்து சென்னைக்கு வருவதாக மகளிடம் பேசியுள்ளார். அப்போது அவர் செல்போனில் அருவருக்கத்தக்க முறையில் மகளிடம் பேசியிருக்கிறார். இந்த பேச்சு செல்போனில் உள்ள  கால் ரெக்கார்டரில் பதிவாகி இருந்துள்ளது. இது அருளின் மனைவிக்கு தெரியவர அவர் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் திருவள்ளூர் குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் செய்தார். இதனையடுத்து கமிட்டி ஆவடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர்  ஷோபா ராணி தலைமையில் போலீசார் சிறுமியை அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், அருள் தனது மகளை பலமுறை மிரட்டி பாலியல் தொல்லை செய்து வந்தது தெரிந்தது. இவ்வாறு செய்தால், சாமியாராக தனக்கு சக்தி பெருகும். நமது குடும்பத்திற்கு நல்லது நடக்கும் என கூறியதாகவும் தெரியவந்துள்ளது.  இதனையடுத்து, கொல்லிமலையில் இருந்து சென்னைக்கு வந்த அருளை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தந்தையே தனது மகளை பாலியல் தொல்லை செய்தது திருநின்றவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதியவர் போக்சோவில் கைது

போரூர் அம்பாள் நகரை சேர்ந்தவர் ஜெகன்நாதராவ் (68), சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில்  4 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தாள். இவர், அந்த சிறுமியை நைசாக பேசி வீட்டிற்கு  அழைத்துச் சென்று, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். அதன்பேரில், பெற்றோர் பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் விசாரணையில்,  சிறுமிக்கு ஜெகன்நாதராவ் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories: