×

கொரோனா வைரஸ் பரவலை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை: சீன அதிபர் கைவிரிப்பு

பீஜிங்: `சீனாவில் கொரோனா வைரசை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் சட்ட விரோதமாக விற்கப்படும் சுகாதாரமற்ற இறைச்சியில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. இதனால், வுகான் உள்ளிட்ட 18 நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, தலைநகர்  பீஜிங்கில் 51 பேரும், ஷாங்காய் நகரில் 40 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக  உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோய் வேகமாக பரவி வருவதால் மேலும் 1,300 படுக்கை  வசதி கொண்ட 2வது சிறப்பு மருத்துவமனை அடுத்த 15 நாட்களில்  கட்டி முடிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில்,  சீன அதிபர் ஜீ ஜின்பிங் ேநற்று கூறுகையில், ``சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. அரசு மிக  துரிதமாக முடிந்த உதவிகளை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க இரண்டு சிறப்பு மருத்துவமனைகள் விரைவில் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் எப்படி உருவானது என்று மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ராணுவ மருத்துவர்களும் நோயாளிகளை கவனித்து வருகின்றனர். தற்போது உறுதியாக சொல்லக் கூடிய ஒன்று, இந்த வைரஸ் பரவுவதை அரசால் தடுக்க  முடியவில்லை. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை,’ என்று கூறியுள்ளார். சீன அரசு கைவிரித்ததை தொடர்ந்து அந்நாட்டில் இருக்கும் ஜப்பான் உள்ளிட்ட பல நாட்டு தூதர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்திய மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `சீனாவிலிருந்து இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் மூலம்  ஹூபெய் மாகாணத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உதவிகள், வசதிகள் தூதரகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை  இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

இறைச்சிக்கு தடை

சீன விவசாயத் துறை அமைச்சகம், வர்த்தக ஒழுங்குமுறைக்கான மாநில நிர்வாகம், தேசிய வனவியல் நிர்வாகம் ஆகியவை இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், `வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், உணவகங்கள், ஓட்டல்கள்,  ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்யும் நிறுவனங்கள் உள்பட அனைத்து இறைச்சி விற்பனை மையங்களுக்கும், இறைச்சி விற்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இறைச்சி உண்பதை தவிருங்கள். நல்ல  ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Chinese ,President ,coronavirus spread , We can't control coronavirus spread: Chinese President
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...