×

திமுக முதன்மை செயலாளராக கே.என். நேரு எம்எல்ஏ நியமனம்: பொது செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு

சென்னை: திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:  திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு எம்பி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். எனவே அவருக்கு பதிலாக திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அவர் கூறி  உள்ளார். திமுகவின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.என்.நேரு, திராவிடக் கொள்கையில்  பற்றுக் கொண்டு, திமுகவில் 1986 முதல் பங்குபெற்று  வருகிறார். ஆரம்ப காலத்தில் 1986ம் ஆண்டில் திமுக சார்பில் புள்ளம்பாடி  யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1989 முதல் 1999 வரை திமுக ஆட்சிக்  காலத்தில் மின்சாரம், பால்வளம், செய்தித்துறை, தொழிலாளர்துறை ஆகிய  துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1996 முதல் 2001 வரை  திமுக ஆட்சியின் போது உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து  பின்னர் 2006 முதல் 2011 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராகப்  பணியாற்றினார்.


2016 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி  பெற்று எம்எல்ஏவாக உள்ளார். 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர். 30 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். திருச்சியில் திமுகவின் முக்கியதலைவராக கே.என்.நேரு இருக்கிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல் திருச்சி கலைஞர் அறிவாலயம் பிரமாண்டமான முறையில் கட்டினார் கே.என்.நேரு. இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார். தற்போது திமுகவின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கே.என்.நேருவுக்கு திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நெய்குளம் கிராமம் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து
திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு, எம்.எல்.ஏ., திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் ஆகியோரை நேற்று, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Nehru ,General Secretary ,DMK ,K.Anabhagan ,Announcement ,KN Nehru MLA , DMK Chief Secretary, K.N. Nehru MLA, Appointment, General Secretary K.Anabhagan, Announcement
× RELATED 31வது ஆண்டு விழா திமுகவுக்கு என்றும்...