×

சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: காதலி ஏமாற்றியதாக உடலில் பெட்ரோல் ஊற்றி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி... போலீஸ் தீவிர விசாரணை

சேலம்: சேலம் நீதிமன்ற வளாகத்தில், காதலி ஏமாற்றியதாக உடலில் பெட்ரோல் ஊற்றி சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் நீதிமன்றத்தில் இன்று காலை 8 மணிக்கு, குடியரசு தினவிழாவையொட்டி, தேசிய கொடி ஏற்ற ஏற்பாடுகள் நடந்தது. அந்த நேரத்தில், நீதிமன்றத்திற்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்தார். அவர், திடீரென கொடி கம்பம் அருகே சென்றநிலையில், பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்களும், போலீசாரும் அவரை மீட்டு, உடலில் தண்ணீர் ஊற்றி தனியாக அழைத்துச் சென்றனர்.

பின்னர், அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை மீட்டு விசாரித்தனர். அதில், அவரது பேண்ட் பையில் இருந்த கைக்குட்டையில், ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு ஐ லவ் யூ என பலமுறை எழுதியிருந்தார். தொடர் விசாரணையில் அவர், சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டி அருகேயுள்ள கொழிஞ்சிபட்டியை சேர்ந்த அய்யண்ணன் மகன் வெங்கடாசலம் (35) என்பது தெரியவந்தது. இவர், செவ்வாய்பேட்டையில் கூட்ஸ் செட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தனது வீட்டருகே வசிக்கும் விதவை பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது அவருக்கு பணமும் கொடுத்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக அப்பெண் கூறிவிட்டு, தற்போது திருமணம் செய்ய முடியாது என ஏமாற்றி விட்டதாக போலீசாரிடம் கூறினார். காதலி ஏமாற்றியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய, நீதிமன்றத்திற்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடாசலத்தை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Salem Court Complex: Woman ,laborer , Salem, laborer, trying to fire
× RELATED திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்...