×

தமிழகம்-ஆந்திர மாநில கிராமங்களை இணைக்கும் திண்டிவனம்-நகரி ரயில்பாதை திட்டம் 12 ஆண்டாக இழுபறி: 2007ல் துவங்கி ஆமைவேகத்தில் பணிகள் நகர்கிறது

ஆற்காடு: தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் போக்குவரத்து, தொழில், வியாபாரம், விவசாயம், சுற்றுலா வளர்ச்சி மற்றும் மாணவ மாணவிகளின் உயர் கல்வி ஆகியவற்றுடன் இதுவரை ரயில் போக்குவரத்தை காணாத மக்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு புதியதாக ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கத்திலும் கடந்த 2004ம் ஆண்டு திண்டிவனம்- நகரி இடையே 180 கிலோ மீட்டர் தூரத்திற்கு ₹4,97.6 கோடி செலவில் புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து 2006-2007ம் ஆண்டு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ₹582.83 கோடி திட்ட மதிப்பீட்டில் திண்டிவனம்- நகரி புதிய ரயில் பாதை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் ₹740 கோடியாக உயர்த்தப்பட்டு, கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு ₹850 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக ₹45 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் திண்டிவனம் வழியாக செல்வதால் திண்டிவனத்தில் இருந்து இந்த திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை 18 இடங்களில் புதிய ரயில் நிலையங்களும், 3 பழைய ரயில் நிலையங்களும் என்று மொத்தம் 21 ரயில்வே நிலையங்கள் இடம் பெறுகின்றன.

மேலும் இந்த புதிய வழித்தடத்தில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 லெவல் கிராசிங்குகள், 11 மேம்பாலங்கள், 30 தரைவழி பாலங்கள் ஆகியவை அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இந்த ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ராணிப்பேட்டையில் 2007 ஆகஸ்டு 26ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வேகமாக பணிகள் நடந்து வந்த நிலையில் அதன்பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த புதிய ரயில்வே திட்டம் வணிகரீதியாக லாபகரமாக இருக்காது என்று திட்டக்கமிஷன் முதலில் ஆட்சேபம் தெரிவித்தது. பின்னர் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. அதேநேரத்தில் இந்த திட்டப்பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதமே காரணம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் ஆண்டுதோறும் திட்ட மதிப்பீடு உயர்ந்து வருவதும் இந்த பணிகள் முடங்கி கிடைப்பதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்காக வருவாய்த்துறை சார்பில் புதிய ரயில்வே வழித்தடம் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் நில ஆர்ஜித பிரிவு அலுவலகம் தனியாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் வருவாய்த்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று முடிந்து ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு சென்னைக்கு 6 மாதத்திற்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திண்டிவனம்- நகரி புதிய ரயில் பாதை பணிகள் 2020ல் நிறைவடையும் என்றும், இந்த வழியாக 5 புதிய ரயில்களும், தென் தமிழகம் செல்லும் சரக்கு ரயில்கள் சென்னை ரயில் நிலையத்தை கடக்காமல் செல்லும் எனவும்,

புதுச்சேரி மற்றும் பிற பகுதிகளுக்கு கூடுதலாக 2 அல்லது 3 ரயில்கள் செல்லும் என்றும் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு திடீர் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டது. இதனால் இந்த திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 2018-19ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு ₹1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 13 சதவீதம் இது அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகததால் 4 மாவட்ட மக்களும் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

இதற்கிடையே ஆற்காடு செய்யாறு உட்பட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மேம்பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் திருடிச் செல்லும் நிலையாக உள்ளது. இந்த ரயில்வே திட்டப் பணிகளுக்காக போடப்பட்டுள்ள கட்டுமான பொருட்கள் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் அங்கு மது குடிப்பது உட்பட பல்வேறு சட்டவிரோத செயல்களும் நடைபெற்று வருவதால் மக்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். எனவே மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் திண்டிவனம்- நகரி ரயில்வே திட்டத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும்.

அதேபோல் ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசி திட்டத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த எம்ல்ஏக்கள் சட்டமன்றத்தில் பேசி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.கே.முரளி கூறியதாவது: ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக வந்தவர்கள் யாரும் இத்திட்டத்தை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. இதனால் இந்த திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் நன்மை ஏற்பட்டு பயன்பெற்று இருப்பார்கள். தென்மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சென்னை சென்று அங்கிருந்து திருப்பதிக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் நேரம் அதிகமாவதுடன் பணமும் அதிகமாக செலவாகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் அவர்கள் திண்டிவனம் வந்து அங்கிருந்து இந்த புதிய ரயில்வே திட்டத்தின் மூலம் திருப்பதிக்கு எளிதில் செல்ல வழிவகை ஏற்பட்டிருக்கும். மேலும் தென்மாவட்ட வியாபாரிகள் தங்களது விளைப்பொருட்களை வடமாவட்டத்தில் விற்பனை செய்வதற்கு இந்த ரயில்வே திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் மத்திய அரசும் மாநில அரசும் மெத்தனம் காட்டுவது வருத்தமாக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசும் விரைந்து செயல்பட வேண்டும். அதேபோல் மாநில அரசும் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Tindivanam-Nagari ,villages ,Tamil Nadu ,Andhra Pradesh ,Andhra Pradesh Tindivanam-Nagari Railway Line , Tindivanam-Nagari Railway Project, Tug
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு