மந்தகதியில் மேம்பாலப்பணிகள் திசையெல்லாம் சுருங்கிய சாலைகள்: போக்குவரத்து நெரிசலால் அலறும் சேலம் மாநகரம்

சேலம்: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலுள்ள மாநகர சாலைகள்  ஆக்ரமிப்பால் குறுகிய சாலைகளாக காட்சியளிக்கிறது. இதில் சேலம் மாநகரிலுள்ள சாலைகள் முதலிடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. சேலம் மாநகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு  பெரும்பாலான சாலைகள் நடைபாதை கொண்ட சாலையாக இருந்தது. நாளுக்கு நாள் அந்த  நடைபாதைகளை ஆக்ரமித்து கடைகள் விரித்தனர். தற்போது அந்த இடங்களை சாலையோர  வியாபாரிகள் நிரந்தரமாக  பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக சேலம் மாநகர பகுதியில்  எங்கு  பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இதில் குறிப்பாக  சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் வரும்போது லீ பஜார்,  முள்ளுவாடி கேட், அணைமேடு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2014ம் ஆண்டில் லீபஜார், முள்ளுவாடி கேட்,  1, 2, அணைமேட்டில் மேம்பாலம் அமைக்க  உத்தரவிட்டார். இந்த மேம்பாலங்கள் ₹  156 கோடியில் அமைக்கப்படும் என்று அப்போது அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு  பிறகு முதற்கட்டமாக கடந்த 2015ம் ஆண்டு லீ பஜாரில் மேம்பாலம் கட்டும் பணி  தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடந்தது. இதில்  பாலம் முடியும் இடமான செவ்வாய்பேட்டை முக்கோணம் அரிசிக்கடை பகுதியில் நிலம்  கையகப்படுத்த வேண்டி இருந்தது. இதன் காரணமாக மேம்பாலப்பணிகளை  முடிக்க  முடியாமல் போனது. அந்த பகுதியில் உள்ள நில உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு  சென்றனர்.

இந்நிலையில்,  நீதிமன்றம் மூலம் அப்பகுதியில் ஓர் ஆண்டுக்கு  முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் மேம்பால பணியில் தொடர்ந்து  தொய்வு ஏற்பட்டு வருகிறது. லீ பஜார் மேம்பாலத்தை போலவே முள்ளுவாடி 2வது  கேட்டில் மேம்பாலம் கட்ட கடந்த 2016ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. பணி  தொடங்கிய போதே, தேவையான நிலங்களை கையகப்படுத்திவிட்டு, மேம்பாலப்பணி  தொடங்க வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இந்த பகுதியில் ரயில்வே நிர்வாகம் மேம்பாலம் கட்டி மூன்று ஆண்டுகளாகிறது. ஆனால் வருவாய்த்துறை,  நெடுஞ்சாலைத்துறையால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேம்பாலம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  தற்போது அந்த  பகுதியில் முதல் கேட் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழியாக  ரயில்கள் வரும்போது நான்கு புறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  வருகிறது.

அடிவாரம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி  உள்ளிட்ட பகுதிகளில் வரும் வாகனங்களுக்கு இது, முக்கிய  சாலையாக உள்ளது. இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால்,  கடந்த இரு மாதத்திற்கு முன்பு சேலம் மாநகர போக்குவரத்து போலீசார் ஹெல்மெட்  சாலையாக மாற்றினர். இப்பகுதியில்  மேம்பாலப்பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் தினசரி  அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஓமலூர் மெயின் ரோடு, சாரதா கல்லூரி  சாலையில் போக்குவரத்து நெரிசலை போக்க ₹ 320 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்  என்று கடந்த 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில் மேம்பாலம் கட்ட  பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த இரு சாலையிலும் 6.5  கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் 5 ரோட்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் ஈரடுக்கு மேம்பாலம்  அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தில் சாரதா கல்லூரியில்  மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு, கடந்தாண்டு ஜூனில் மேம்பாலம் பொதுமக்கள்  பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது. தற்போது ஓமலூர் மெயின்ரோட்டில் 4  ரோட்டில் இருந்து 5 ரோடு வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. புதிய பஸ்ஸ்டாண்ட், சொர்ணபுரி, 4 ரோடு, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில்  மேம்பாலப்பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக  வாகனங்கள் சுற்றி செல்கின்றன.

சேலத்தில் லீ பஜார், முள்ளுவாடி கேட், ஓமலூர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலப்பணி ஆமை வேகத்தில் நடந்து  வருவதால் வாகன ஓட்டிகள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த  மேம்பாலப்பணிகளை துரிதப்படுத்தி பணியை முடிக்க வேண்டும் என்பதே, போக்குவரத்து நெரிசலால் அலறிக் கொண்டிருக்கும் சேலம் மாநகர மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

4ஆண்டுகளாக  முடியாத லீபஜார் மேம்பாலப் பணிகள்: வணிகர் சங்கம் குமுறல்
சேலம் மாநகர சில்லரை  வணிகர்கள் சங்க தலைவர் பெரியசாமி கூறுகையில், ‘‘சேலத்தில் முக்கிய வர்த்தக கேந்திரமாக லீ பஜார்,  செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் பகுதிகள் உள்ளது. இந்த  பகுதிகளில் ஆயிரக்கணக்கில் கடைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும்  மேற்பட்ட லாரிகளில் சரக்குகள் வருகின்றன. போக்குவரத்து நெரிசலை போக்க  சேலத்தில் தொடங்கப்பட்ட முதல் பாலம் லீ பஜார் மேம்பாலம் தான். ஆனால் நான்கு  ஆண்டுகளுக்கு மேலாகியும் மேம்பாலப்பணி முடியாமல் இருப்பது வேதனை,’’ என்றார்.

மக்கள் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்: உதவி கமிஷனர் வேண்டுகோள்
சேலம்  மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கூறுகையில், ‘‘சேலம் மாநகர பகுதிகளில் முக்கிய இடங்களில்  மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் முள்ளுவாடி கேட், புதிய  பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி உள்ளிட்ட பகுதிகளில்  போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை போக்க மேம்பாலம்  அவசியமாகும். மேம்பாலப்பணியை முடியும் வரை வாகன ஓட்டிகள் போக்குவரத்து  போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்,’’ என்றார்.

அடிக்கடி மாற்றம் செய்வதால் குழப்பம்: போக்குவரத்து ஆர்வலர் ஆதங்கம்
போக்குவரத்து  ஆர்வலர் ஜோஸ் கூறுகையில், ‘‘சேலத்தில்  நடக்கும் மேம்பாலப்பணியால் பல பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. முள்ளுவாடி கேட் பகுதி, கடந்த இரு மாதத்திற்கு முன்பு  ஹெல்மெட் சாலையாக மாற்றப்பட்டது. போக்குவரத்து போலீசார் அவ்வப்போது போக்குவரத்து  விதிமுறைகளை மாற்றி வருகின்றனர். இதனால் இந்த வழியை பயன்படுத்தும் வாகன  ஓட்டிகள் குழப்பமடைகின்றனர். மேம்பால பணிகளால் 4 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிரமத்தை போக்க, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்,’’ என்றார்.

Tags : Roads ,Recession ,Salem , Highway, traffic congestion, Salem city
× RELATED அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி...