×

பிரதமர் அடிக்கல் நாட்டி ஒரு வருடமாகியும் பயனில்லை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடர்ந்து இழுத்தடிப்பு

* நிதி ஒதுக்கீடு, திட்ட அறிக்கை என்னாச்சு?  
* மத்திய, மாநில அரசுகள் தாமதம் ஏன்?

திருப்பரங்குன்றம்:  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டி ஒரு வருடமாகியும்  இன்னும் நிதி ஒதுக்கீடு, திட்ட அறிக்கை தயார் செய்யப்படவில்லை. முதற்கட்டமாக துவங்கிய சாலை, சுற்றுச்சுவர் பணிகளும் இழுபறியாகி வருவதால் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டாமல் தாமதம் ஏற்படுத்தி வருவது ஏன் என சந்தேகம் எழுந்துள்ளது. தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம், தோப்பூரில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் சுமார் 224 ஏக்கர் பரப்பளவில்  அமையவுள்ளது. இதற்கான அறிவிப்பு  கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதே ஆண்டு ஜூலை மாதம் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எச்ஐடிஇஎஸ் எனும் இந்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குழு தோப்பூரில் ஒதுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

பின்னர் இக்குழுவின் பரிந்துரைப்படி அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கட்டமாக மண்  மற்றும் கல் மாதிரிகள் சேமிக்கப்பட்டு  மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள மத்திய மண் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆர்டிஐ தந்த அதிர்ச்சி: இதன்மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் துவங்கிவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 2018ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின்னர் 2018, டிசம்பரில்  தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ரூ.1,264 கோடி அறிவித்து ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அதே டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டது.

பின்னர் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பிரதமர் மோடி, தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.  பல அடுக்கு மாடிக்கு உறுதி : பின்னர் இரண்டாம் கட்டமாக கடந்த 2019, ஜூன் மாதம் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் இருந்து மீண்டும்  கல் மற்றும் மண் மாதிரிகள் சோதனைக்காக மத்திய மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 6ம் தேதி  மத்திய குழு, ஜப்பானிய நிதி குழு ஆகியோர் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை  பார்வையிட்டனர். 224 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த இடம் முக்கோண வடிவில் உள்ளதால், இடத்தின் அமைப்பை பொறுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் ஐந்து மாடிகள் கொண்ட முக்கோண வடிவில் கட்டப்படவுள்ளதாகவும், அதேபோல் இந்த இடத்தின் பல  அடுக்கு மாடிகள் கட்டும் அளவிற்கு மண்ணின் தன்மை உறுதியாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

பைப்லைனால் பிரச்னை:  மேலும் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் நடுவே இந்தியன் ஆயில் பைப் லைன் செல்வதால்,  பைப் லைன் செல்லும் பகுதியான சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்படாது எனவும், அந்த இடத்தின் வழியாக குடிநீர் இணைப்புகள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதேபோல் இங்கு அமையும் மருத்துவமனை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அமைய உள்ளதாகவும், இந்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவன அலுவலக வட்டாரங்கள் சார்பில் தகவல்கள் வெளியாகின.  ஆனால் ஜப்பானிய நிதிக்குழு பைப் லைன் செல்லும் பகுதியை தவிர்த்து இடம் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இல்லையெனில் அந்த இடத்தில் பாலம் உருவாக்கி அதில் எப்போதும் நீர் உள்ளவாறு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

கனவாகவே போய் விடுமோ? : இந்நிலையில்  இப்பகுதிக்கு செல்ல மத்திய சாலை திட்டத்தின் கீழ்  ரூ.21.2 கோடி செலவில் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு,  12 இடங்களில் தரைப்பாலம் கட்டப்பட்டு நான்கு வழிச்சாலை பணிகள் துவங்கியுள்ளது. தொடர்ந்து ரூ.5 கோடி செலவில் நவீன முறையில் 5.5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த 2019, டிசம்பரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைய இன்னும் 6 மாத காலம் தேவைப்படும். இவை நிறைவடைந்த பின்னரே எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் துவங்க வாய்ப்புள்ளது. இதனால் தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமையும்? என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதும் மத்திய அரசு நான்கு ஆண்டுகளில் பணி முடிக்கப்படும் என கூறியது. ஆனால் அடிக்கல் நாட்டி ஒரு ஆண்டை கடந்த நிலையில் இன்னும் நிதியும் ஒதுக்கப்படவில்லை. திட்ட அறிக்கையும் தயார் செய்யப்படவில்லை. தென்மாவட்ட மக்களிடையே ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் கட்டவில்லையோ என சந்தேகம் எழுகிறது’’ என்றனர்.

மெத்தனமாக இருக்கும் மத்திய அரசு
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் கூறுகையில், ‘பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி ஒரு ஆண்டை கடந்த நிலையில் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படாமல் உள்ளதும்,  அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்காமல் இருப்பதும் மத்திய அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. திமுக சார்பில் தலைவர் ஸ்டாலின் அறிவுரைப்படி எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைவதற்காக சட்டமன்ற  உறுப்பினராக நான் மற்றும் இதற்காக போராடிய அமைப்பினருடன் சேர்ந்து மத்திய சுகாதார அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். ஏழை, எளிய மக்கள் உயர்சிகிச்சை என்பது எட்டாக் கனியாக உள்ளது. எய்ம்ஸ் மூலம் அலனைவரும் குறைந்த செலவில் உயர்சிகிச்சை பெற முடியும். எனவே மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.  

பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் கூறுகையில், ‘தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளரை சந்தித்து பேசியுள்ளேன்.  மத்திய அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளேன். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இதுகுறித்து குரல் கொடுப்போம். மோடி குறிப்பிட்டவாறு  2023க்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட வைக்க தேவையான அனைத்து முய்ற்சிகளையும் எம்பி என்ற முறையில் செய்வேன்’ என்றார்.

Tags : AIIMS , Prime laying, AIIMS construction work, traction
× RELATED டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி