×

திசை மாறும் கலாசாரம், குடும்பங்கள்: டிக்டாக் மூலம் பள்ளி மாணவி உட்பட பல பெண்களுடன் பழக்கம்

* மனைவி புகாரின் பேரில் கணவர் கைது
* தமிழக அரசு தடை செய்ய கோரிக்கை

பண்ருட்டி: டிக்டாக் மூலம் பள்ளி மாணவி உட்பட பல பெண்களிடம் பழக்கம் ஏற்பட்டதோடு, பள்ளி மாணவியுடன் தொடர்பு வைத்திருந்த வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பண்ருட்டி அருகே மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(26). இவரது மனைவி சுகன்யா(25) மருங்கூர் கொள்ளுகாரன்குட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டிற்கு முன்பு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. தர்ணிகா(3) என்ற பெண் குழந்தை உள்ளது. சந்தோஷமாக குடும்பம் செய்து வந்தநிலையில் ராஜசேகர் எலக்ட்ரிக் வேலை செய்வதற்காக அடிக்கடி வெளியூர் சென்று வருவதுண்டு.

அவ்வாறு செல்லும் போது தனது செல்போனில் தான் எடுத்த படங்களை வைத்து பதிவு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தது தெரியவருகிறது. வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் கூட பேஸ்புக்கில் அதிகளவு கவனம் செலுத்தி உள்ளார். இதனால் மனைவி ஆத்திரமடைந்து இதுபோல் இருந்தால் குடும்பம் நடத்துவது எப்படி என கேட்டபோது இருவரிடையே தகராறு எழுந்துள்ளது. மனைவியை ராஜசேகர் அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் ராஜசேகர் வெளியூர் பகுதியில் வேலை செய்ய சென்றபோது தனது பேஸ்புக் நண்பர்களிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.

இதில் டிக்டாக் மூலம் பல்வேறு பதிவுகளை போட்டு அனுப்பியபோது ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நண்பர்களாக இணைந்துள்ளனர். இதன் காரணமாக சரிவர வேலையே செய்யாமல் டிக்டாக்கிலேயே மூழ்கி இருந்ததாக தெரிகிறது. குடும்பம் நடத்த வேலைக்கு செல்ல வேண்டும் என மனைவி கூறியதால் எரிச்சலடைந்த ராஜசேகர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. கணவர் வராததை கண்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வேதனையில் இருந்த சுகன்யாவிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுவதை அறியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது சுகன்யாவின் நண்பருக்கு வந்த டிக்டாக்கை சுகன்யா பார்க்க நேர்ந்தது.

அதில் வேறு ஒரு பிளஸ்- 2 மாணவியுடன் ராஜசேகர் இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா கடந்த 22ம் தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அதில் கணவர் தன்னுடன் சேர்ந்து வாழாமல் வேறு ஒரு பெண்ணுடன் டிக்டாக்கில் பழகி திருமணம் செய்ததாக தெரிய வருகிறது. எனவே அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறியிருந்தார்.  எஸ்பி புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில் சுகன்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

சப்- இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு பதிந்து ராஜசேகரை கைது செய்வதற்காக பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், மேலிருப்பு ஆகிய பகுதிகளில் தேடி வந்தனர். பணிக்கன்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருப்பதாக வந்த தகவலின் பேரில் விரைந்து சென்று ராஜசேகரை அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, போலீஸ் வட்டாரத்தில் கூறியதாவது: கைது செய்யப்பட்ட ராஜசேகர் பேஸ்புக், டிக்டாக்கில் எப்போதும் மூழ்கி இருப்பது தெரிய வந்தது.  அதில், ஏராளமான பதிவுகளை போட்டு பல்வேறு நபர்களை நண்பர்களாக்கி நேரத்தை வீணாக்கி இருந்துள்ளார்.

டிக்டாக்கில் இவரது பதிவுகளை நம்பி புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி நண்பராகி திருமணம் செய்யும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளி மாணவியின் பெற்றோர் உடனடியாக கவனித்து இருந்தால் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருக்காது. டிக்டாக் மூலம் பத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் ராஜசேகருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. பெண்களில் பெரும்பாலானோர் பேஸ்புக், டிக்டாக் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை குறிப்பாக தினந்தோறும் கவனித்து வரவேண்டும். செல்போன் வாங்கி தரும்போது அறிவுரைகளை கூற வேண்டும்.

பெரும்பாலும் பெண்கள் செல்போனில் இதுபோன்ற செயலிகளை பார்க்காமல் நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். தாங்கள் அணியும் ஆடைகளில் கூட கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்கள். இதுகுறித்து சிபிஐ மாவட்ட செயலாளர் சேகர் கூறியதாவது: உலகமயமாக்கல் என்ற தாக்கத்தின் விலைவாக சமூக வளைதளங்கள் விஞ்ஞானம், பொருளாதாரம், கல்வி சமூக சிந்தனை விளையாட்டு ஆகிய துறைகளில் வளர்ச்சி, நாட்டம் செலுத்தாமல் மனிதகுல நாகரீகத்தை சீர்குலைக்கும் விதமாக அன்னியநாட்டு மோகத்தால் டிக்டாக் போன்ற செயலிகளை நமது ஆண், பெண் இளைஞர்கள், மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதை அனுமதிப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கலாச்சார, ஒழுக்க நெறிமுறைகளுக்கு முரணானது. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து தேச நலன் கருதி தவறான இணையதள செயலிகளை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : Families ,Dicktag ,Women , Dickdock, schoolgirl,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...