×

ஓவர்லோடு பிரச்னைக்கு தீர்வு சென்னை அருகில் புதிய துணைமின்நிலையம்: தமிழக மின்சாரவாரியம் திட்டம்

சென்னை: ஓவர் லோடு பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், சென்னை அருகில் புதிய துணைமின்நிலையத்தை அமைக்க தமிழக மின்சாரவாரியம் திட்டமிட்டுள்ளது.  தமிழகத்தில் வீடு மின்இணைப்புகள்-2 கோடி, வணிகம்-35 லட்சம், தொழிற்சாலைகள்-7 லட்சம், விவசாயிகள்-21 லட்சம், குடிசைகள்- 11 லட்சம் என ெமாத்தம் 2.90 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரம் அனல், காற்றாலை, நீர், சூரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 14,000 மெகாவாட்டிற்கும் மேல் மின்தேவை உள்ளது. கோடைகாலங்களில் மின்தேவையின் அளவு வழக்கத்தைவிட கூடுதலாகும். அப்போது மின்விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும். அதாவது மின்விநியோகத்திற்கு துணை மின்நிலையம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

துணைமின்நிலையமும் விநியோகம் செய்யப்படும் பகுதிக்கும் நீண்ட தூர இடைவேளியில் பல பகுதிகள் அமைந்துள்ளது. இதனால் மின்இழப்பு மற்றும் ஓவர்லோடு பிரச்னை ஏற்பட்டு சீரான மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 13 முதல் 15 சதவீதம் அளவிற்கு மின்இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்றொருபுறம் ஓவர்லோடு பிரச்னையால் மின்சாதனங்கள் பழுதடைவதாக கூறப்படுகிறது. இதைதடுக்கும் மின்வாரியம் கடந்த 8 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட துணைமின்நிலையங்களை அமைத்துள்ளது. இருப்பினும் ஓவர்லோடு பிரச்னை என்பது தொடர்ந்து நுகர்வோருக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் இப்பிரச்னை அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இதைக்கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக துணைமின்நிலையங்கள் அமைத்தல் மற்றும் மின்பாதைகள் அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தின் மின்தேவை உயர்ந்து வருகிறது. இதனால் சீரான மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இதைக்கட்டுப்படுத்தும் வகையில் மின்தேவை வளர்ந்து வரும் இடங்களில் புதிதாக துணைமின்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வீடுகள் அதிகரித்து வருகிறது.  இதனால் அங்கு மின்தேவை என்பதும் உயர்ந்து வருகிறது. எனவே இதற்கு தற்போதுள்ள துணைமின்நிலையங்களைக்கொண்டு மின்விநியோகத்தை சீராக செய்ய முடியாது. இதன்காரணமாக மாம்பாக்கத்தில் புதிய 230/110 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் அமைக்கப்படுகிறது.  இதற்கான மின்பாதை திருப்போரூர், சாலவாக்கம், செங்காடு, ஈச்சங்காடு, வெண்பேடு, அம்மாபேட்டை, நெல்லிக்குப்பம், காயார், கல்வாய், ஒத்திவாக்கம், முருகமங்கலம், குமிழி, கீழ்கோட்டையூர், மேல்கோட்டையூர், வேங்கடமங்கலம், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் அமைகிறது.

மொத்த மின்பாதையின் நீளம் 34கிமீ ஆகும். இதேபகுதியில் உள்ள 110கிலோ வோல்ட் சிறுசேரி-சிஎம்டபுள்யூஎஸ்எஸ்பி இரண்டை சுற்று மின்பாதையில் காலியாகவுள்ள மின்கோபுர கூம்பில் 110கிலோ வோல்ட் ஒற்றை சுற்றுக்காண மின்கம்பி இழுத்தல் பணி நடக்கிறது. இதற்கான மின்பாதை சிறுசேரி, படூர், நாவலூர், முட்டுகாடு, கேளம்பாக்கம், சாலவாக்கம் மற்றும் திருப்போரூர் ஆகிய பகுதிகளின் வழியாக அமைக்கப்படுகிறது. இதன் மொத்த நீளம் 16கிமீ ஆகும்.இதேபோல் புதிதாக அமையவுள்ள 230/110கிலோ வோல்ட் மாம்பாக்கம் துணை மின்நிலையத்திற்கு பழைய 110கிலோ வோல்ட் ஒற்றை சுற்று (சிங்கபெருமாள் கோவில்- சிறுசேரி-மாம்பாக்கம்) மின்பாதையின் புதிய 110 கிலோ இரட்டை சுற்று மின்பாதையாக மாற்றி நிறுவப்படுகிறது.  இதற்கான மின்பாதை வேங்கடமங்கலம், கண்டிகை, எம்ஜிஆர் நகர் பகுதி-1, மூலஞ்சேரி, ஸ்டார்சிட்டி, மதுரப்பாக்கம், சித்தாலப்பாக்கம் மற்றும் மாம்பாக்கம் ஆகிய  இடங்களில் அமைக்கப்படுகிறது. இதன்மொத்த நீளம் 4கி.மீ ஆகும். தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Substation ,Chennai , Overload Problem, Chennai, Substation, Tamil Nadu Electricity Project
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...