×

உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்க கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும், உயர் நீதிமன்ற பதிவாளரும் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிட்டி சிவில் நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், மத்திய தீர்ப்பாயங்கள், வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள், சிபிஐ சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.  இந்த நீதிமன்றங்களில் பெரும்பாலான நீதிமன்றங்கள் விசாரணை நீதிமன்றங்கள். விசாரணை நீதிமன்றங்களுக்கு தினமும் கைதிகள் அழைத்து வரப்படுகிறார்கள்.

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஆயிரக்கணக்கானோர் தினமும் வருகிறார்கள். இவர்கள் நீதிமன்றங்களுக்கு வரும்போது எதிர்தரப்பினரால் தாக்கப்படுவதும், தகராறுகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.  சமீபத்தில் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழக்கில் ஆஜராக வந்த கணவன் தனது மனைவியை கத்தியால் குத்திய சம்பவமும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஏற்கனவே உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்க வேண்டும். அப்படி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்படும்பட்சத்தில் நுழைவு வாயிலில் ஒரே ஒரு முறை மட்டுமே சோதனை நடத்தப்படும்.

 விசாரணை நீதிமன்றங்களுக்கு வருபவர்களிடம் எஸ்பிளனேட் நுழைவு வாயிலிலும், நீதிமன்ற கட்டிட நுழைவு வாயிலிலும் சோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குள் செல்ல வேண்டுமானால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சோதனைக்கும் உட்பட வேண்டும். இதுபோன்ற நடைமுறையால் உயர் நீதிமன்ற ஊழியர்கள், உயர் நீதிமன்ற மருத்துவமனை பணியாளர்கள், வக்கீல் குமாஸ்தாக்கள் பலமுறை சோதனைக்கு ஆளாக வேண்டியுள்ளது. இந்த நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டுமானால் உயர் நீதிமன்ற வளாகம் முழுவதிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்க வேண்டும்.  அப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டால் வளாகத்திற்கு வரும்போது ஒரே ஒரு முறை சோதனை மட்டுமே நடத்த வழியேற்படும். விசாரணை நீதிமன்றங்கள் அமைதியான முறையில் நடைபெற வாய்ப்பு ஏற்படும். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை அனுப்பினேன்.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலித்து சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளர், தமிழக சட்டத்துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் தமிழக அரசு மார்ச் 4ம் தேதிக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

Tags : CBI ,CISF ,High Court ,Govt ,Tamil Nadu , High Court, CISF Security, Icort, Govt. High Court, CISF Security, Icort, Govt.
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...