×

சிக்னலில் நிற்காமல் சென்றால்ஆர்டிஓ அலுவலகங்களுக்கு அபராத பட்டியல் செல்லும் லைசென்ஸ் மாற்ற செல்லும் போது மொத்தமாக வசூலிக்கும் புதிய முறை அறிமுகம்

சென்னை: சென்னையில் சிக்னலில் நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகள், ஆர்டிஓ அலுவகங்களுக்கு வரும்போது அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பலர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதாவது ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, குடிபோதை, மொபைல் போன்களில் பேசிக்கொண்டு செல்வதால் விபத்து நடக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மேலும் பலர் கை, கால்களையும் இழக்கின்றனர். இதனால் வாகன ஓட்டி மட்டும் அல்லாது அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதைத்தடுக்கும் வகையில், அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் முக்கிய சாலைகளில் அதிநவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுசாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்வோர், போக்குவரத்து போலீசார் இல்லாவிட்டால் விதிமீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கேமிராக்கள் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களை படம்பிடிக்கும். அந்த படத்தை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவைக்கும். அங்கு வாகனத்தின் நம்பரை வைத்து, அதன் உரிமையாளரின் பெயர், எந்த ஆர்டிஓ அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வாகனம் வருகிறது. முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பது போன்ற அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படும். தொடர்ந்து பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி ஈடுபட்ட விதிமீறலுக்கு ஏற்றவாறு அபராதத்தொகையும் கணக்கீடு செய்யப்படும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். அங்கு சம்மந்தப்பட்ட வாகனஓட்டியின் பெயர், முகவரி, எண்,  அபராதத்தொகை, விதிமீறலில் ஈடுபட்ட இடம் போன்றவை சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இதுகுறித்த தகவல் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிக்கு தெரியாது. அவர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பெயர் மாற்றம், லைசென்ஸில் முகவரி மாற்றம் போன்ற ஏதாவது ஒரு பணியை செய்வதற்காக வரும்போது தான் தெரியவரும். அதன்பிறகு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தொகையை முழுவதும் செலுத்திய பிறகே, மற்ற பணிகளை முடிக்க முடியும்.  அபராதத்தொகையை செலுத்தாமல் பிற பணிகளை செய்ய முடியாது. குறிப்பாக இதில் சிக்னலில் நிற்காமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளே அதிக அளவில் சிக்குவதாக கூறப்படுகிறது.  இதனால் விதிமீறலில் ஈடுபடும் வாகனஓட்டிகள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags : license change ,offices ,RTO ,RTO offices , Signal, RTO Offices, Fines
× RELATED அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும்...