×

போக்குவரத்து விதிகளை காலில் போட்டு மிதித்து பைக்குகளில் சீறிப்பாயும் பள்ளிச் சிறுவர்கள்: அதிகரிக்கும் விபத்துகளை கண்டுகொள்ளாத போலீசார்

வேலூர்: நாட்டில் சாலை விபத்துக்கள், உயிர் பலிகள் ஏற்படும் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில், கடந்த ஆண்டு, 15 ஆயிரத்து 642 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக 43 பேர் சாலை விபத்துகளில் பலியாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகன சட்டம், 181ன் படி, 18 வயது நிரம்பாதவர்கள், ‘லைசென்ஸ்’’ இல்லாதவர்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளி, கல்லூரி  மாணவர்கள், சிறுவர்கள் அதிகளவு சிசி திறன் கொண்ட பைக்குகளில் ரோட்டில் சீறி பாய்கின்றனர். அதிவேகமாக பைக்குகளை ஓட்டுவது மட்டுமின்றி, பணம், விலை உயர்ந்த பொருட்களை வைத்து போட்டி நடத்துகின்றனர். பைக் ஓட்ட உடல், மனத்தகுதி இல்லாத தங்களது பிள்ளைகளை வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கின்றனர். இதனால் பிள்ளைகளின் உயிர்களை பறிக்கும் பாதக செயலுக்கு இணையானதாக உள்ளது.

தற்போது வாகனச் சந்தையில் இளைய சமுதாயத்தினரை கவரும் வகையில் பல்வேறு வகையான பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. 150 சிசி முதல் 650 சிசி செயல்திறன் கொண்ட பைக்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை, ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இந்த பைக்குகளில், மணிக்கு 150 முதல் 180 கி.மீ., வரை அசுர வேகத்தில் பயணிக்கின்றனர். இதுபோன்ற வேகங்களே மரணத்தில் தள்ளுகின்றன. இத்தகைய சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு வாகன போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சாலையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. பதிவெண் பெறாத வண்டிகளை சாலைகளில் இயக்கக்கூடாது. 18 வயது மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டிச் செல்லும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் அதிவேகமாக பைக்குகளில் பறக்கும் நபர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முக்கியச் சாலைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. ஆனால் சட்ட நடவடிக்கைகள் கண்காணிப்போடு நின்றுவிட்டதால் அதிவேகமாக பைக்குகளில் பறக்கும் சிறுவர்கள் மீதான நடவடிக்கைகள் கிடப்பில் போட்ட கல்லாகவே உள்ளது. இதனால் சமீப காலமாக பைக் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கின்றனர். கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டிச்செல்லும் சிறுவர்கள் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கிறார்கள்ம் போலீசார், பள்ளிச் சிறுவர்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு சென்று சாலை விதிகள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சாலை விதிகளை பின்பற்றாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டிச் செல்வது குற்றம் என்பதை எடுத்துரைத்து மாணவர்களுக்கு தெளிவான சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். இத்தகைய சீரிய நடவடிக்கைகளால் சிறுவர்கள் அதிவேகமாக பைக்குகளை இயக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். எனவே, போக்குவரத்து போலீசார் தீவிரமாக ரோந்துப் பணிகளை மேற்கொண்டு சிறுவர்கள் அதிவேகமாக பைக்குகள் ஓட்டிச் செல்வதை தடுக்க வேண்டும்’ என்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 63 ஆயிரத்து 920 வாகன விபத்துகள் நடந்துள்ளது. இதில் 12 ஆயிரத்து 216 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நடந்தவை. அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவு ஆகியவையே 90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் அத்துமீறி பைக் ரேஸ்களில் ஈடுபடும் சிறுவர்களால் விபத்துகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.



Tags : accidents ,pedestrians ,schoolchildren ,Crippayum , Traffic rules, bikes
× RELATED ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!!