×

உழவுக்கு உலை வைக்கும் புதிய சட்டம் விளைநிலங்களை இழக்கப் போகும் தமிழக விவசாயிகள்?

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த தயங்கிய ஒரு சட்டத்தை தமிழக அரசு  வேக வேகமாக நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தால் தமிழக விவசாயிகளின் விளைநிலங்கள்  கார்ப்பரேட் வசம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உணவு உற்பத்தி, உணவுத்தட்டுப்பாடு, உணவுப்பஞ்சம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான பொருளாதார சதி வலையையும் சத்தமில்லாமல்  தமிழக அரசு  பின்னியுள்ளது. தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி 2018-19ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘‘ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க உரிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்’’ என சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு  அக். 29ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலைப் பெற்று அது சட்டமாகியுள்ளது. தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) 2019 என்பது தான் அந்த சட்டத்தின் பெயர்.

விவசாயத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, சமத்துவத்தை கொண்டு வருவது, விவசாயிகளுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பன்முகப்படுத்துவது, கிராமப்புற பொருளாதாரத்தை விரைவாக மாற்றியமைப்பதே இந்த  சட்டத்தின் நோக்கமென நிதி ஆயோக் கூறுகிறது. உண்மையில் இந்த சட்டம் வேலைவாய்ப்பையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்த தான் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற கேள்வியை விவசாய அமைப்புகள் எழுப்புகின்றன. விவசாயிகள் தற்கொலை: இந்தியாவில் இன்னமும் அறுபது சதவிகித மக்கள் வேளாண்  தொழிலில் தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டு வருகின்றனர்.  அதனால் தான் இந்தியா வேளாண் நாடு என்று அழைக்கப்படுகிறது. பருவமழையை நம்பி தான் இந்தியாவில் வேளாண் தொழிலே நடக்கிறது. இதனால் பருவமழை பொய்த்துப் போவது, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லாதது, இடைத்தரகர்களின் சுரண்டலால் நாளுக்கு நாள் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது.

2016ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதிக தற்கொலை நடந்தது  இந்தியாவில் தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  அந்த  அறிக்கைப்படி, 2016ம் ஆண்டில் இந்தியாவின் தற்கொலை விகிதம்  1 லட்சம் பேருக்கு 16.5 தற்கொலை என்றிருந்தது. இது உலகளாவிய தற்கொலை விகிதமான 10.5 என்பதை விட அதிகம். இந்த தற்கொலை பட்டியலில் அதிகம் இருப்பது விவசாயிகள் தான் என்பது மிகப்பெரிய சோகம். மூடி மறைக்க முயற்சி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  ஒரு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிக்கை 2016ம் ஆண்டே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் தற்கொலையை மூடி மறைக்கப்பார்த்து முடியாமல் மூன்று வருடம் கழித்து தான்  தேசிய குற்ற ஆவண முகமையின் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் குறித்த ஆய்வு அறிக்கையை  அரசு வெளியிட்டது.

இந்த அறிக்கை, 2016ம் ஆண்டில் மட்டும் 11,379 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்கிறது. இந்தியாவில் மாதம்  948 தற்கொலைகளும், நாள்தோறும் 31 தற்கொலைகளும் நடந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் ஆண்கள் தான் அதிகம். 2016ல் 3,661 விவசாயிகளும், 2015ல் 4,291 விவசாயிகளும், 2014ல் 4,004 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது 2013 முதல் 2018ம் ஆண்டு வரை  15,356 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கர்நாடகாவில் 2016ல் 2,079 விவசாயிகளும், 2015ல் 1,569 விவசாயிகளும்   தற்கொலை செய்துள்ளனர். தெலங்கானாவில்  2014ல் 1347 விவசாயிகளும், 2015ல்  1400 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். குற்ற ஆவண முகமையின் அறிக்கை வெளியிட துவங்கிய ஆண்டான 1995 முதல் இந்தியாவில் 3,33,407 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. அதற்காக தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை நடக்கவில்லையென்று நினைக்க வேண்டாம்.

டெல்டாவில் தான் அதிகம்: கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் பாஜ எம்பி வருண்காந்தி பேசுகையில், ‘‘தமிழகத்தில் 827 விவசாய தொழிலாளர்களும்,  68 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டனர்’’ என்று கூறினார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 67 சதவீதம் பேர் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அந்த டெல்டாவை குறிவைத்து தான் தற்போது 5வது ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் தற்கொலை அதிகம் உள்ள டெல்டா, பாலைவனமாக இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் திட்டத்திற்கு அனுமதி தேவையில்லையென்ற சலுகையையும் பாஜ அரசு வாரி வழங்கியுள்ளது. இதனால் போராட்ட பூமியாக காவிரி டெல்டா தற்போது உருமாறிக் கொண்டிருக்கிறது.
புதிய சட்டத்தில் அரசின் பங்கு: விவசாயிகள் உற்பத்தி செய்யும்  பொருட்களுக்கு இச்சட்டத்தால் அமைக்கப்படும் குழு விலையை நிர்ணயம் செய்யும். அதன்படி ஒருபயிர் பயிரிடப்படும் முன்பே அதற்கான விலையை அக்குழு ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயம் செய்துவிடும். சாகுபடி முடிந்ததும் அவ்விலைக்கு அப்பொருள் எடுத்துக் கொள்ளப்படும் என்று புதிய விவசாய  ஒப்பந்த சட்டம் கூறுகிறது. அப்படியென்றால் அரசு எதற்கு?

ஏற்கனவே விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு  குறிப்பாக, அரசு விலைநிர்ணயம் செய்த கரும்பு, நெல் போன்ற ஆதாரவிலை உள்ள பொருள்களுக்குக்கூட, முழுமையான கொள்முதல் விலை கிடைப்பதில்லை.  தமிழகம் முழுவதும் சர்க்கரை ஆலைகள் ரூ.19 ஆயிரம் கோடி வரை நிலுவைத் தொகை பாக்கி வைத்திருப்பதால் கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உள்நாட்டு கரும்பு முதலாளிகளிடம் இருந்து இந்த பாக்கியை வசூல் செய்து தர முடியாத தமிழக அரசு, விவசாய ஒப்பந்த சட்டப்படி பாதிக்கப்படும் விவசாயிக்கு கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து எப்படி பாக்கியையோ, நிவாரணத்தையோ பெற்றுத் தர முடியும்? சட்டம் என்ன சொல்கிறது? தமிழ்நாட்டை பொறுத்தவரை மூலிகைப் பயிர்கள் போன்றவை ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும் இவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை இந்த சட்டம் உறுதி செய்யும் என்கிறது.

உண்மையில், இந்த சட்டம் விவசாயிகளுடன் அரசு கொண்டுள்ள உறவை வெட்டி விட்டுள்ளது. அதாவது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் காணாமல் போகும். விலையை இனி கார்ப்பரேட் கம்பெனிகள் தான் முடிவு செய்யப்போகிறார்கள். அத்துடன்  என்ன விதை, இடுபொருள், என்ன பூச்சிக்கொல்லி, என்ன தொழில்நுட்பம்   பயன்படுத்த வேண்டும் என கார்ப்பரேட் முதலாளிகள் தான் தீர்மானிக்கப் போகிறார்கள். இனி விவசாயி தன் வயலில் என்ன விளைவிக்க வேண்டும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.
பிரிட்டிஷ்  ஆட்சிக் காலத்தில் ஐரோப்பிய சந்தைக்கு தேவைக்காக இந்திய விவசாயிகளை அவுரி சாகுபடி செய்யச் சொல்லி வற்புறுத்தி கொடுமைப்படுத்தினர். இதை எதிர்த்து அவுரி விவசாயிகள் எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தியதாக வரலாறு உண்டு. மீண்டும் அப்படியான வரலாற்றுப் போராட்டத்திற்குத் தான் இந்த சட்டம் இட்டுச் செல்கிறதோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ரசாயனப்பயன்பாடு அதிகரிக்கும்: தமிழகத்தில் தற்போது இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பாரம்பரிய விதைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் ஒப்பந்த சாகுபடி சட்டம் நடைமுறைக்கு வந்தால், மீண்டும் ரசாயனப் பயன்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். விதைப்பதற்கு முன்பே கொள்முதல் நிர்ணயிக்கப்படும் என இம்முறை கூறுகிறது. ஒப்பந்தம் செய்த தினத்தன்று நிர்ணயித்த விலையிலேயே பரிமாற்றம் செய்யப்படும் என்று அரசு கூறுகிறது,  ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட பொருளுக்கு ஒப்பந்த நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்யும். தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை பல மடங்கு விலை கொடுத்து தான் விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

 விளைச்சல் வீழ்ச்சியடைந்தால் நிவாரணத்தொகையை அரசு தற்போது தருகிறது. இந்த ஒப்பந்த சட்டத்தால், எந்த அளவிற்கு விளைந்து இருக்கிறதோ, அந்த  அளவிற்கு தான் ஒப்பந்த நிறுவனங்கள் பணம் தரும்.  வறட்சி, வெள்ளம். இயற்கை இடர்பாட்டில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால், நஷ்ட ஈடோ, நிவாரணத்தொகையோ இனி கிடைக்காது. காவிரி டெல்டா மட்டுமல்ல இனி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றவே இந்த சட்டம்
இயற்கை வேளாண்மை விஞ்ஞானி பாமயன் கூறுகையில், ‘‘குஜராத் உள்பட பல மாநிலங்களில் தோல்வியடைந்த இந்த சட்டத்தை தான் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள் அதிகமாக உள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு பயிரை விளைவிக்கின்றனர். எனவே, விவசாயிகளை நிலங்களில் இருந்து வெளியேற்றி விட்டால், கார்ப்பரேட் கம்பெனிகள் வசம் விவசாயம் போய் விடும். அதற்காகத் தான் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் ஒரு குறிப்பிட்ட பயிர், அதாவது ஒரு கம்பெனி விரும்பிய பொருள் தான் விளைவிக்க முடியும். இந்தியாவை விட அமெரிக்காவில் பருத்திக்கு மானியம் அதிகம் கிடைக்கிறது. எனவே, பருத்தியை அதிகம் சாகுபடி செய்தால், தமிழகத்தில் நெல் உள்ளிட்ட உணவுப்பொருள் உற்பத்தி மட்டுமின்றி உணவுத்தட்டுப்பாடும் ஏற்படும். இதேபோல விவசாயிகளிடம் விலை நிர்ணயம் செய்வதில் அத்துமீறல் நடக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

ஏனெனில், ஒப்பந்தத்தின் போது விளையும் பொருட்களின் அளவு இவ்வளவு வேண்டும் என்பார்கள். அப்படி விளையாத போது, அவர்கள் கேட்கும் விலைக்குத் தான் விவசாயி விற்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், இந்த ஒப்பந்த முறை உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதில் ஏற்றுமதியை மையப்படுத்தியே உள்ளது. அத்துடன் விவசாயி உற்பத்தி செய்யும் பொருளை அவர் இனி விற்க முடியாது என்பது மிகக்கொடுமையான சட்டம், விவசாயிகளை நிலங்களை விட்டு வெளியேற்ற நினைக்கிறது.

ஜனநாயகத்திற்கு எதிரான சட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்  கூறுகையில், ‘‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைபடி வேளாண் பொருட்களுக்கு 50 சதவீத விலையை உயர்த்தி வழங்குகிறோம் என வாக்குறுதி அளித்து தான் 2014ம் ஆண்டு பாஜ ஆட்சிக்கு வந்தது. அதற்கு எதிரான விவசாய ஒப்பந்தமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. எந்த மாநிலமும் அதை சட்டமாக்கவில்லை. ஆனால், தமிழக அரசு விரைந்து அதை சட்டமாக்கியுள்ளது. ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அதை ஜனநாயகப்பூர்வமாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் முன் விவாதம் நடத்தி நிறைவேற்ற வேண்டும். ஆனால், அந்த ஜனநாயக நெறிமுறைகளை மீறி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, விவசாயத்திற்கு, எதிரான சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’’ என்கிறார்.

நிலம் மலடாகும்
இந்த சட்டத்தில் பயிர்த் தொழிலோடு, தோட்டப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, இறைச்சி விலங்கு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, விவசாயக் காடுகள், விளைபொருள் பதப்படுத்தல் மற்றும் தொடர்புடைய பிற நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயி பயன்படுத்தும் நிலம் குத்தகை காலம் முடிந்த பின் பயிரிடுவதற்கான மண்ணாக இல்லாமல் மலட்டுத்தன்மை ஏற்படும். நிலத்தின் மண்வளம் பாதிப்படைந்தால் குத்தகையை ரத்து செய்யலாம் என்ற  இந்தச் சட்டம் சொன்னாலும், மண் வளம் பாதிப்படைந்ததா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பார்கள் என்று சட்டம் சொல்லவில்லை.நிலத்தை கையப்படுத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக விவசாயி கேள்வி கேட்க முடியுமா? எந்த பயிரை எப்போது விளைவிப்பது என இனி விவசாயி முடிவெடுக்க முடியாது. விவசாயிகளிடமிருந்து  குத்தகை காலம் முடிந்த பிறகு நிலமேம்பாடு முதலீடு செய்த மதிப்பில் எஞ்சியதை கார்ப்பரேட் நிறுவனங்கள் திரும்பப்பெறும் உரிமையை இந்த சட்டம் தந்துள்ளது.

இதன் மூலம் நில மேம்பாடுக்கு செய்த தொகை என விவசாயிகளிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிரட்டி நிலத்தை சுருட்டவும் வழி வகை செய்யும். அத்துடன் இந்த  சட்டப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தம் என்ற பெயரில் விளைநிலங்களை மீத்தேன், ஹைட்ரோகார்பன், போன்ற பேரழிவு திட்டங்களுக்கு அபகரிக்கவே வழிவகுக்கும். காப்புரிமை என்ற பெயரில் விவசாயிகளை அடிமைப்படுத்துவதுடன் விவசாயிகளின் நிலங்கள் பறிபோகும். சுயசார்பு பொருளதாரம் கொண்ட விவசாயத்தை,  சில கம்பெனிகளிடம் அடகு வைக்கும் அரசின் முயற்சி கண்டிக்கத்தக்கது. எனவே, இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் ஓங்கி குரல் எழுப்புகின்றன.

Tags : land Farmers ,Tamil Nadu ,farmland , Farmers of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...