×

தமிழகத்தை குற்ற சம்பவம் நடக்காத மாநிலமாக மாற்ற நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: தமிழகத்தை குற்ற சம்பவங்கள் நடக்காத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக சார்பில், தமிழுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய விடுதலைக்குப் பின்பு, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியில் இந்தியா முழுவதும்  இந்தியைத் திணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார்கள்.  இதை எதிர்த்து தந்தை பெரியார், ம.பொ.சி, திரு.வி.க. போன்ற  தமிழர்களெல்லாம் போராட்டத்தில் ஈடுபட்டதால்   கடைசியில் கட்டாயம் என்பது விருப்பப் பாடமாக மாற்றப்பட்டது.

இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாற்றை தமிழ்நாட்டு மக்களுக்கு, இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்  தான் வீரவணக்க நாளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.    இன்னொரு மொழியைத் திணித்து தம் தாய் மொழியை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்துப் போராடி உயிர் துறந்த முதல் வீரர்கள் தமிழர்கள் தான். எண்ணற்ற தியாகச் செம்மல்கள்  தன் உயிரை, மொழிக்காகத் துறந்தனர். தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய எந்தத் திட்டமாக இருந்தாலும், இந்த அரசு அதனை எதிர்த்து, மக்கள் நலனை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்கும்.

 சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும்,  அற்புதமான திட்டங்களை தீட்டி செயல்படுத்துகின்ற அரசு நம்முடைய அரசு.
. இந்த அமைப்பை எம்.ஜி.ஆர் உருவாக்குகின்ற பொழுது ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் உள்ள சாமானியர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர் இருக்கின்றவரை  இந்த ஆட்சியை தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை.

 கடந்த ஆண்டு அக்டோபர் 21ம்தேதி வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பெருநகரமாக சென்னை விளங்குகிறது.  குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகப் பாதுகாப்பான பெருநகரமாக சென்னை விளங்குகிறது. நாம் சட்டம்-ஒழுங்கை பேணிக்காப்பதன் மூலமாக இவையெல்லாம் சாத்தியமாயிருக்கிறது.

 சென்னை மாநகரம் முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. இன்றைக்கு காவல்துறை நவீன முறையில் பல  திட்டங்களை வகுத்ததன் காரணமாக சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச்சம்பவங்களை கண்டுபிடித்து வருகிறோம், ஆகவே குற்றச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன.  குற்றங்கள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகரம் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள எல்லா மாநகராட்சி பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்துகின்ற பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.  எங்கேயும் குற்றம் நிகழாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதிகமாக  போக்குவரத்து இருக்கின்ற சாலை சந்திப்புகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது.  

 படிப்படியாக நகராட்சிப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தமிழகத்தை குற்றச்சம்பவம் நடக்காத மாநிலமாக உருவாக்குவதற்கு எங்களுடைய அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த அரசு அனைத்து துறைகளிலும் சிறந்து  விளங்கியதற்கு பல்வேறு விருதுகளை நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். ஊரக வளர்ச்சித் துறையில் 104 தேசிய  விருதுகள் பெற்றிருக்கிறோம். சிறப்பான அரசு என்பதற்கு இதுதான் சான்று.
    
 நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, சென்னை மாநகர மேயர் அதிமுகவை சார்ந்தவராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் தான் அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும்.  பாஜவுக்கு அடிமை அரசு என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.

 அதிமுக அரசு அடிமை அரசு அல்ல. மக்களுக்கான அரசு. தமிழகத்துக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதே எங்கள் லட்சியம். அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் உயர்பதவிக்கு வரலாம். உழைக்கும் உறுப்பினர்  யாராக இருந்தாலும் அவர்கள் அதிமுகவில் மட்டும்தான் முதல்வராக வரமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Edappadi Palanisamy ,state ,talks ,Tamil Nadu , Steps to make Tamil Nadu a crime free state: Chief Minister Edappadi Palanisamy talks
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...