×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் முகுருசா: நடால், ஸ்வெரவ் முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) நேற்று மோதிய முகுருசா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 7 நிமிடத்திலேயே முடிவுக்கு  வந்தது.பிளிஸ்கோவா அதிர்ச்சி: மற்றொரு 3வது சுற்றில் 2வது ரேங்க் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 6-7 (4-7), 6-7 (3-7) என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து  ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சிமோனா ஹாலெப் (ருமேனியா), கிகி பெர்டன்ஸ் (நெதர்லாந்து), எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), அனெட் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய  சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் சக வீரர் கரினோ புஸ்டாவை எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 38 நிமிடத்துக்கு நீடித்தது. ஜெர்மனி வீரர்  அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை (ஸ்பெயின்) வென்றார். ரஷ்யாவின் டானில் மெட்வதேவ், டொமினிக் தீம் (ஆஸ்திரியா), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா (சுவிஸ்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மாரத்தான் போராட்டம்: ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் - கரென் கச்சனோவ் (ரஷ்யா) இடையே நேற்று நடந்த 3வது சுற்று போட்டி கடும் போராட்டமாக அமைந்தது. கிர்ஜியோஸ் 6-2, 7-6 (7-5) என முதல் 2 செட்களையும் கைப்பற்றி  முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்டையும் 7-6 (8-6), 7-6 (9-7) என கச்சனோவ் வென்று பதிலடி கொடுக்க 2-2 என சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 5வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவிக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

உள்ளூர் ரசிகர்களின் ஆரவார ஆதரவுடன் விடாப்பிடியாகப் போராடிய கிர்ஜியோஸ் 6-2, 7-6 (7-5), 6-7 (6-8), 6-7(7-9), 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 4 மணி, 26  நிமிடத்துக்கு நீடித்தது. கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - நடியா கிச்சனோக் (உக்ரைன்) ஜோடி 7-5, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் லியுட்மிலா கிச்சனோக் (உக்ரைன்) - ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை வீழ்த்தி  2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.



Tags : round ,Nadal ,Australian Open ,Swarov , Muguruza in the 4th round of the Australian Open: Nadal, Swarov advance
× RELATED சில மாநிலங்களில் பாஜக...