×

ஜாதி, மதத்தை பார்த்து ஓட்டு போடாமல் நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள்: தலைமை செயலாளர் அறிவுரை

சென்னை: ஜாதி, மதத்தை பார்த்து ஓட்டு போடாமல், நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று தலைமை செயலாளர் சண்முகம் இளைய சமுதாயத்தினருக்கு அறிவுரை வழங்கினார். தேசிய வாக்காளர் தின விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வரவேற்று பேசினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தலைமை செயலாளர் சண்முகம்,  மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். `வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வி அறிவு’’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விழாவில் தலைமை செயலாளர் சண்முகம் பேசியதாவது:  மக்களாட்சி ஒரு சிறந்த அமைப்பு என்று கொண்டு வந்தார்கள். காலப்போக்கில் அதையும் சீர்குலைத்து, சுயநலத்திற்காக சிலர் பயன்படுத்தும்பொழுது, அந்த அமைப்பு முறையே மாறி மறுபடியும் மன்னர் கால ஆட்சியில் இருந்த குறைபாடுகள்  எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய வாக்கின் மதிப்பு என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அந்த காலத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவுதான். மக்களாட்சியில் எல்லாரும் சமம். அதேநேரம், அவர்கள் ஓட்டு போடும்போது தன்னுடைய  ஜாதி, மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் வராமல், நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.

அடுத்து, டிவிட்டர், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் மூளைச்சலவை செய்யப்படுகிறது. உண்மை இல்லாத சம்பவங்களை திரும்ப திரும்ப போடுகிறார்கள். இந்த விளம்பர யுக்தி, மக்களாட்சியில் ஒருவர் பதவிக்கு வருவதற்கு சாதகமாக அமைந்து  விடுகிறது.
இதுபோன்ற மாற்றங்களை கொண்டுவர வல்லமை படைத்தவர்கள் இளைய சமுதாயம்தான். மனித நேயம்தான் அடிப்படை கருத்து என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஜாதியோ, மதமோ அது அவரவர்களை சார்ந்தது. ஆனால்,  ஒவ்வொரும் சகோதர, சகோதரிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். யார் நல்லவர்கள் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும். கண்டிப்பாக வாக்களித்து ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும். இதை வாக்காளர்களிடம் சரியாக  எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பெற்றோர்களுக்கு பணம் கொடுக்க குழந்தைகள் அனுமதிக்க கூடாது

தேர்தல் பணிகளை சிறப்பாக செய்த முதல் மூன்று கலெக்டர்களான ஷில்பா பிரபாகர் சதீஷ் (திருநெல்வேலி), சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), வி.சாந்தா (பெரம்பலூர்) ஆகிய மூன்று பேருக்கு விருதுகளை வழங்கி தமிழக கவர்னர் பன்வாரிலால்  புரோகித் பேசியதாவது:
நான் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை 9 தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். இதில் 3 மக்களவை தேர்தலிலும், 2 சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளேன். ஒரு வேட்பாளர் தேர்தலின்போது செலவு செய்யும்போது  வேட்பாளர் செலவு கணக்கு, கட்சி செலவு கணக்கு தனித்தனியாக இருந்தது.

ஒரு வேட்பாளருக்கு கட்சி செலவு செய்தாலும் வேட்பாளர் கணக்கில்தான் சேர்க்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தேன். தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது.  தேர்தல் சீர்திருத்தத்திற்கு நானும் ஒரு காரணம். ஓட்டுரிமை உள்ள அனைத்து கல்லூரி மாணவ - மாணவிகள் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும். குழந்தைகள் தங்கள் பெற்றோர் தேர்தலின்போது பணம் வாங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு  அவர் பேசினார்.

Tags : Chief Secretary , Watch out for caste and religion and drive for good: Advice from the Chief Secretary
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...