×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விஸ்வரூபம்: ரூ.12 லட்சத்துக்கு வினாத்தாள் விற்பனை...சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்

* மேலும் 4 பேர் கைது
* உயரதிகாரிகள் சிக்குகிறார்கள்

சென்னை: டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு வினாத்தாள் ₹12 லட்சத்துக்கு விற்பனையானது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளும் சிக்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 4 பதவியில் 9,398 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுக்கு  பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்திருந்தனர். இதன்காரணமாக, விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 16.30 லட்சத்தை தொட்டது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. நவம்பர் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல்  வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

அங்கு தேர்வு எழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஆனால், சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் தோல்வியை சந்தித்தனர். இதனால் வெளிமாவட்டத்தில்  இருந்து தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றதில் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. சொந்த மாவட்டத்திலேயே தேர்வு மையங்கள் இருக்கும்போது இவர்கள் ஏன் இங்கு வந்து தேர்வு எழுதினர் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த  மையங்களில் பெரும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கஷ்டப்பட்டு தேர்வு எழுதியவர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமேஸ்வரம், கீழக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று விசாரித்தனர். மேலும் 100 பேருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் விசாரித்தனர். இதில் முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

எந்தவழியில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி, சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் தலைமையில், எஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணையில் இறங்கினர். அப்ேபாது தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து,  ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய வெளி மாவட்டங்களை சேர்ந்த 99 பேரை டிஎன்பிஎஸ்சி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில், 99 பேரும் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்தது தெரியவந்தது. இவர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளை குறித்து விட்டு வந்ததும், தேர்வு மையத்தில் புதிதாக விடைகள் ஆன்சர் சீட்டில் பதிவு செய்ததும் தெரியவந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99  தேர்வர்களில் 65 பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இடைத்தரகர் மூலமே இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரணை நடக்கிறது. இந்த முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தாசில்தார்கள் பார்த்தசாரதி மற்றும் வீரராஜ் உட்பட 15 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  புரோக்கர் ஒருவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.அவரிடம் 3வது நாளாக விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட, டிபிஐ அலுவலக உதவியாளர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் (39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த திருக்குமரன் (35), தேர்வில்  முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (21) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மேலும் 9 பேரிடம் தொடர்ந்து எழும்பூர் சிபிசிஐடி  தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை  நடக்கிறது.  கடலூர் சிபிசிஐடி போலீசார் உள்ளூர் போலீஸ் உதவியுடன் பண்ருட்டி, சிறு கிராமம் ஆகிய 2 பகுதிகளுக்கு நேற்று முன்தினம் விரைந்தனர். அங்கு 2 வீடுகளில் ஆய்வு நடத்தினர். இதில் ஏஜென்டிடம் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும்  ஒருவரை கைது செய்தனர். மற்றொருவர் வீட்டில் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய ஆரணிக்கு விரைந்தனர்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் வினாத்தாள் முன்பே வழங்கப்பட்டு விட்டது.  இதில் ஒரு வினாத்தாளுக்கு ₹12 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் மேலும் பல அரசு அதிகாரிகளும் தொடர்பு இருப்பது  தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை  நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முறைகேடு வழக்கில் தொடர்புடைய இடைத்தரகராக செயல்பட்ட ஆவடியை சேர்ந்த  வெங்கட்ரமணன் (38) மற்றும் தேர்வில் இடைத்தரர்களுக்கு பணம் கொடுத்து முறைகேடாக அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் நூறு  இடங்களுக்குள் வெற்றி பெற்ற மூன்று நபர்களான ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா, சிறுகிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி,  கவுரிபேட்டை பகுதியை சேர்ந்த மு.காலேஷா (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதுவரை மொத்தம் 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும், நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் 11பேர் பட்டியலை வைத்து அவர்களை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. நெல்லை இடைத்தரகர்: நெல்லை மாவட்டம், விஜயாபதியைச்சேர்ந்த ஐயப்பன்  என்பவரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சிபிசிஐடிஅதிகாரிகள் விசாரணைக்காகஅழைத்துச் சென்றனர். இதற்கிடையே ஒருவர்ரூ.12 லட்சம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கொடுத்து வெற்றி பெற்றிருப்பதும்விசாரணையில்  அம்பலமாகியுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முறைகேடு விஸ்வரூபம் எடுத்து வருவதால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல, டிஎன்பிஎஸ்சி நடத்திய மற்ற தேர்வுகளிலும் இதுபோன்று முறைகேடு நடந்திருக்கிறதா என்று விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்  குறித்தும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மறுதேர்வு சாத்தியமில்லை

குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் வந்த 39 பேருக்கு பதில் அடுத்த தர வரிசையில் இருக்கும் 39 பேரை நேர்முகத்தேர்வுக்கு வருமாறு டிஎன்பிஎஸ்சி இ-மெயில் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. முறைகேடு அம்பலமாகி இருப்பதால்  குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதி இருப்பதால் மீண்டும் சாத்தியமில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறப்படுகிறது.

குரூப் 1, 2 தேர்விலும் முறைகேடு?

தமிழகத்தில் கடந்த 2018 நவம்பரில் குரூப் 2, கடந்த ஜூலையில் குரூப் 1 தேர்வு நடந்தது. குரூப் 2 என்பது வேலைவாய்ப்புத்துறை அதிகாரி, கூட்டுறவுத்துறை அதிகாரி, நகராட்சி ஆணையர் பதவிகளுக்கானது. குரூப் 1 சப் கலெக்டர், உதவி  போலீஸ் கமிஷனர் பதவிகளுக்கானது. இந்த தேர்வுகளில் வென்றவர்கள் தற்போது பல துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள். இதிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதுபற்றியும் சிபிசிஐடி  போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.



Tags : DNPSC Group 4 ,investigation ,CBCID , DNPSC Group 4 Selection Scam Shock information on CBCID investigation
× RELATED ஆன்லைன் பண மோசடி: சைபர் கிரைம் விசாரணை