×

முனியாண்டி கோயில் திருவிழா கோலாகலம்: 150 கிடாய், 300 கோழிகள் பலியிட்டு ‘கமகம’ பிரியாணி பிரசாதம்... ஏராளமானோர் பங்கேற்பு

திருமங்கலம்: திருமங்கலத்தை அருகே வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி கோயிலில் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை பிரியாணி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் அன்னதான திருவிழா நடப்பது வழக்கம். பல்வேறு ஊர்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் இந்த விழாவில் பங்கேற்பர். இந்த கோயிலின் 85ம் ஆண்டு பிரியாணி திருவிழா நேற்று நடந்தது.

விழாவை முன்னிட்டு காப்புகட்டி ஒரு வாரமாக பக்தர்கள் விரதம் இருந்தனர். நேற்று காலை வடக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடங்களில் பால் எடுத்து ஊர்வலமாக வந்து முனியாண்டி சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மாலையில் நிலைமாலையுடன் பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இதில் வடக்கம்பட்டி, பொட்டல்பட்டி, அகத்தாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஊர்வலம் கோயிலை அடைந்த பின்னர், முனியாண்டி சுவாமிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக வளர்த்த கிடாய்கள், கோழிகள் கோயிலில் ஒப்படைக்கப்பட்டன. நள்ளிரவில் சக்திகிடாய் பலியிடப்பட்டது. பின் நேர்த்திகடனாக வழங்கப்பட்ட 150 கிடாய்கள், 300 கோழிகள் பலியிடப்பட்டு 1600 கிலோ அரிசியில் அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டது. அதிகாலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் முனியாண்டி கோயில்கள் உள்ளன. ஆனால் வடக்கம்பட்டி கோயில் தான் ஆதிமுனியாண்டி கோயிலாகும்.

இங்கிருந்து பிடிமண் எடுத்து சென்று பல்வேறு ஊர்களில் முனியாண்டி கோயில் கட்டப்படுகிறது. இங்கு நடைபெறும் பிரியாணி திருவிழா புகழ் பெற்றதாகும். தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் மற்றும் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். இங்கு மட்டுமே பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்படுகிறது’’ என்றனர்.

Tags : Muniyandi Temple Festival Kollam ,kiddos ,Muniyandi Temple Festival Festival , Muniyandi Temple and Festival
× RELATED திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே...