×

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: பிற மாநிலங்களில் இலவச அரிசி பெறுவதில் சிக்கல்; ஜூன் மாதத்திற்குள் அமலுக்கு வருகிறது

நாகர்கோவில், தமிழகத்தில் வழங்கப்படும் இலவச அரிசியை ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் இலவசமாக பெற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு வரத்தொடங்கியுள்ளது. இதன்படி ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் ஆதாருடன் இணைக்கப்பட்ட அவர்களது ரேஷன்கார்டை பயன்படுத்தி அரிசி மற்றும் கோதுமை பெற்றுக்கொள்ள இயலும். அதற்கேற்ற வகையில் ரேஷன்கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு ‘இன்டர் ஸ்டேட் போர்ட்டபிளிட்டி’ என்ற கட்டமைப்பில் இணைக்கப்படும். முதலில் 4 மாநிலங்களிலும், பின்னர் கடந்த  ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 7 மாநிலங்களிலும் என்று தற்போது ஆந்திரபிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, கோவா, ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் மற்றும் கேரளா ஆகிய 11 மாநிலங்களில் இந்த நடைமுறை முதல்கட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த மாநிலங்களில் வசிக்கின்ற ரேஷன்கார்டுதாரர்கள் இதில் எந்த ஒரு மாநிலத்திலும் இருந்தும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (என்எப்எஸ்ஏ) அடிப்படையில் அரிசி கிலோ q3க்கும், கோதுமை கிலோ q2க்கும் வழங்கப்படும். பருப்பு, பாமாயில், சீனி, மண்ணெண்ணெய், ரவை, மைதா, கோதுமை மாவு உள்ளிட்ட பிற பொருட்களை இந்த திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள இயலாது.  அந்தியோதயா திட்டம், முன்னுரிமையுள்ள ரேஷன்கார்டு ஆகியவற்றுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் வகையில் இதற்கான ஐஎன்பிடிஎஸ் சாப்ட்வேர் தயார் செய்யப்படுகிறது. தென் மாநிலங்களில் ஐதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வர் வழியாக இது கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போது முதல்கட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள 12 மாநிலங்கள் தவிர தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அனைத்தும் வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த திட்டத்திற்குள் கொண்டுவரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரேஷன்கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற இயலும். தமிழகத்தை பொறுத்தவரையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதனை போன்று ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் தமிழகத்தில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குகின்ற பிற மாநிலத்தவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் ரேஷன் வழங்கப்படும் என்றும், இதனால் தமிழகத்தில் உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அதே வேளையில் நாட்டிலேயே இலவசமாக ரேஷன் அரிசி வழங்கப்படுகின்ற ஒரே மாநிலம் தமிழகம் ஆகும்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்து இலவசமாக ரேஷன் அரிசி பெற்றுக்கொள்ள இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கேற்ப சாப்ட்வேரில் வசதிகள் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழக குடும்பங்கள் பிற மாநிலங்களில் சென்றால் அரிசியை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் சூழலும் உருவாகும். மேலும் மத்திய அரசு நடைமுறைப்படுத்துகின்ற இந்த திட்டத்தில் மாநில அரசு மானியத்தை அதிகரித்து இலவசமாக வழங்குகின்ற நிலையில் நாளடைவில் இலவச அரிசி விநியோத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அரிசியை விலை கொடுத்து வாங்கிவிட்டு மானியத்தை வங்கி கணக்கில் சேர்ப்பது போன்ற திட்டங்களும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் எழும் என்றும் கூறப்படுகிறது.

Tags : Country ,states , One Country Only Ration Card, Free Rice, Problem, In June, Amal
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...