×

விஜயநாராயணம் அருகே சிறுத்தை அட்டகாசம் அதிகரிப்பு: 25 ஆடுகளை கடித்துக் குதறியது

நாங்குநேரி: விஜயநாராயணம் அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதை விரைந்து பிடிக்காமல் வனத்துறையினர் அலட்சியம் செய்வதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே விஜயநாராயணம், சங்கனாங்குளம் பகுதிகளில் கடந்த இருவாரங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. தகவலறிந்து சென்ற நெல்லை வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டனர். இருப்பினும் வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த இரு பசுங்கன்றுகளை கடித்துக் குதறி தின்றது. வனத்துறையினர் கூண்டு வைத்த போதும் அதில் சிறுத்தை சிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வீராணஞ்சேரி கிராமத்தில் பிச்சைப்பழம் (45) என்ற விவசாயியின் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, அங்குள்ள கிடையில் அடைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்துக் குதறி வேட்டையாடியது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். மேலும் வடக்கு விஜயநாராயணத்தைச் சேர்ந்த புஷ்பராஜன் (35) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த பசுங்கன்றையும், மற்றொரு தோட்டத்தில் இருந்த இரு ஆடுகளையும் கடித்துக் கொன்றது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் தங்கள் பயிரிட்டுள்ள வாழைத் தோட்டத்திற்குள் சிறுத்தை பதுங்கியிருங்கக் கூடும் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாகவே வயலுக்குள் செல்லாமல் இருந்து வருகின்றனர். இதேபோல் விவசாய கூலி வேலைக்கு வரும் தொழிலாளர்களும் வயல்வெளிகளில் பதிவான சிறுத்தையின் கால் தடத்தால் பணிக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து வீராணஞ்சேரி பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்துள்ள வனத்துறையினருக்கு, சிறுத்தை நடமாட்டம் குறித்து அப்பகுதியினர் அவ்வப்போது தகவல் தெரிவித்தும் அதை பிடிக்க போதிய அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.குறிப்பாக வயலில் பதிந்துள்ள சிறுத்தையின் கால் தடம் கால்நடைகளுக்கு ஏற்பட்ட காயம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவே அப்பகுதியினர் உறுதியாக தெரிவித்தும் நம்ப மறுக்கும் வனத்துறையினர், கால்நடைகளை கடித்தது நாயாக இருக்கலாம் என கூறுகின்றனர். மேலும் தவறான தகவலை தெரிவித்தால் வழக்குப் பதிந்து சிறையில் தள்ளுவோம் என வனத்துறையினர் மிரட்டுவதாகவும் பொதுமக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  எனவே, விஜயநாராயணம் பகுதியில் மனிதர்களை சிறுத்தை தாக்கும் முன் அதைப் பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விட மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்….

The post விஜயநாராயணம் அருகே சிறுத்தை அட்டகாசம் அதிகரிப்பு: 25 ஆடுகளை கடித்துக் குதறியது appeared first on Dinakaran.

Tags : Vijayanarayanam ,Vijayanarayana ,
× RELATED மூதாட்டியை மிரட்டிய வாலிபர் கைது