×

நாளை 2வது டி.20 போட்டி: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா... பதிலடி கொடுக்க நியூசிலாந்து ஆயத்தம்

ஆக்லாந்து:  இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து  5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்தியா 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஆட்டம் இழக்காமல் 29 பந்தில் 58 ரன் எடுத்த ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், நாங்கள் உற்சாகமாக அனுபவித்து விளையாடினோம். இங்கு வந்து சேர்ந்த 2  நாளிலேயே இப்படி விளையாடி வெற்றி பெற்றிருப்பது அற்புதமானது. ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு அமோகமாக இருந்தது.  மைதானத்தில் 80 சதவீதம் பேர் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். கடந்த ஓராண்டாக டி.20 போட்டியில், சிறப்பாக விளையாடி வருகிறோம். நியூசிலாந்து 230 ரன் எடுக்கும் என்று நினைத்தேன். ஆனால் 210 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சி. மிடில் ஓவர்களில் நாங்கள் நன்aயல்பட்டதாக நினைக்கிறேன். பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும், என்றார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், தோல்வி அடைந்தாலும் இந்த ஆட்டத்தில் இருந்து நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும். இந்த பிட்ச்சில் அதிக ரன்கள் குவித்தாலும் அதை கொண்டு வெற்றி காண்பது கடினம் என்பதை அறிவேன். பனிப்பொழிவின் தாக்கமும் இருந்தது. இந்திய வீரர்கள் தொடர்ந்து எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். சில விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்ற வழிமுறையை கண்டறிய வேண்டியது அவசியமாகும், என்றார்.இதனிடையே 2வது டி.20 போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. முதல் போட்டியில் வெற்றியால் அணியில்  மாற்றம் எதுவும் இருக்காது என தெரிகிறது.மறுபுறம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் நியூசிலாந்து உள்ளது. பந்து வீச்சில் மாற்றங்களுடன் அந்த அணி களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்லாந்தில் ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?
இருஅணிகளும் நாளை 13வது முறையாக டி.20 போட்டியில்  மோத உள்ளன. இதுவரை மோதிய 12 போட்டியில் இந்தியா 4 , நியூசிலாந்து 8 போட்டியில் வென்றுள்ளன. நியூசிலாந்து மண்ணில் 6 போட்டியில் ஆடி இந்தியா 2 வெற்றி பெற்றுள்ளது. இந்த 2 வெற்றியும் ஆக்லாந்து மைதானத்தில் தான் கிடைத்தது. ஆக்லாந்தில் நாளை ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துபார்ப்போம்.

அற்புதமான அனுபவம் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி
முதல் போட்டியில் ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில்,  ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றி பெற வைத்துள்ள ஒரு நல்ல உணர்வு. 2 விக்கெட்டை விரைவாக இழந்ததால் பார்ட்னர்ஷிப்  உருவாக்குவது முக்கிய மானதாக இருந்தது. மைதானம் சிறியது என்பதால் ரன்ரேட்டை எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம் என்பது தெரியும். இது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த மைதானத்தில் இது எனது முதல் போட்டியாகும்.  ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருந்தது. அடுத்த போட்டியிலும் இதனை எதிர்பார்க்கிறேன், என்றார். 29 பந்தில் 58 ரன்கள்  விளாசிய ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் அய்யர்.


Tags : New Zealand ,match ,2nd T20 , 2nd T20, India, New Zealand
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...