×

தூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சி என அரசு தரப்பு வாதம் : சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி

புதுடெல்லி: திகார் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை வழங்குவதில் திகார் சிறை அதிகாரிகள் தாமதம் செய்வதாக நிர்பயா தூக்கு தண்டனை குற்றவாளிகள் அக்‌ஷய் குமார், பவன் குமார் ஆகியோர் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு இளம் குற்றவாளிகக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங், அக்‌ஷய் குமார் சிங் மற்றும் பவன் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 4 பேருக்கும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட  சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சிறை நிர்வாகம் மீது புகார்

இந்நிலையில், குற்றவாளிகள் அக்‌ஷய் குமார் சிங், முகேஷ் சிங் சார்பில் வழக்கறிஞர் ஏபி சிங், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘அக்‌ஷய் குமார் சிங், பவன் சிங் ஆகியோருக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை வழங்குவதற்கு திகார் சிறை அதிகாரிகள் தாமதம்  செய்கின்றனர்,’ என கூறப்பட்டுள்ளது.

மனுக்கள் தள்ளுபடி

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நிர்பயா குற்றவாளிகள் 2 பேருக்கு திகார் சிறை நிர்வாகம் தேவையான ஆவணங்களை ஏற்கனவே தந்துவிட்டதாக விளக்கம் அளித்தார். இதனிடையே நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் தரப்பட்டதாக வழக்கறிஞர் ஏ.பி.சிங் புதிய புகார் ஒன்றை முன்வைத்தார். மேலும் மருத்துவமனையில் வினய் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஆவணங்கள் தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். இதை கேட்ட அரசு தரப்பு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை தாமதிக்க குற்றவாளிகள் தந்திரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.


Tags : Govt , Dikar, Prison Administration, Nirbhaya, Murder, Offenders
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்