×

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு

புதுடெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த  விவகாரத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி  நீக்கம் செய்யுமாறு தாக்கல் செய்த  மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி  உச்ச நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சி மூன்று அணிகளாக பிரிந்தது. தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.  பழனிச்சாமிக்கு எதிர் அணியில் தற்போதைய துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்  இருந்தார். இந்நநிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான சட்டமன்றத்தில்  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுரப்பட்ட போது கட்சி கொறடா உத்தரவை மீறி  எடப்பாடிக்கு எதிராக பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள்  வாக்களித்தனர்.  

எனவே, கொறடா உத்தரவை மீறிய ஆளும் கட்சியை சேர்ந்த 11  பேரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்  என கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு  தொடரப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  ஏற்கனவே தொடரப்பட்டு நிலுவையில் இருப்பதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றம்  கடந்த 2018ம் ஆண்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
 இதையடுத்து, அதிமுகவை சேர்ந்த 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று  திமுக சார்பில்  நேற்று மூத்த வக்கீல் கபில் சிபில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சமீபத்தில் இதேபோன்ற வழக்கு ஒன்றில் மணிப்பூர் மாநில வனத்துறை அமைச்சர் ஷ்யாம்குமாரை தகுதி நீக்கம் செய்வது பற்றி நான்கு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டியதோடு, ஒபிஎஸ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரினார். இதனை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே அமர்வு, திமுக வக்கீலின் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.  மணிப்பூர் மாநில அமைச்சர் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை சபாநாயகர் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பது பற்றி நாடாளுமன்றம்  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : DMK ,disqualification ,hearing ,Supreme Court ,OPS , OPS dismisses 11 MLAs, Supreme Court, DMK
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு